எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி: முதல் நாளிலேயே மக்களவை முடங்கியது
புதுடெல்லி: எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதல் நாளிலேயே மக்களவை முடங்கியது. மாநிலங்களவையில், அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி வாழ்த்தி பேசினார். நாடாளுமன்ற மக்களவையின் ஆறாவது கூட்டத்தொடரான நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச. 1) தொடங்கி வரும் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்களில் 15 அமர்வுகளைக் கொண்டுள்ள இந்தக் கூட்டத் தொடரில், பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான குறைந்தது 13 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கலால் வரி திருத்த மசோதா, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா, அணுசக்தி மசோதா மற்றும் உயர்கல்வி ஆணைய மசோதா ஆகியவை அடங்கும். அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பான மசோதா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அது குறித்தான சிறப்பு விவாதத்திற்கும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக நேற்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இரு அவைகளிலும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்துள்ளன. குறிப்பாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்), நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசு ஆகியவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக நேற்று மாலை காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி இல்லத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். இன்று கூட்டத் தொடங்குவதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் உள்ள குளறுபடிகள் குறித்து அவசரமாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய் குமார் வசந்த் ஆகியோர் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கினர்.
அதேபோல் சமாஜ்வாதி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இதே பிரச்னையில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கத் தயாராக உள்ளன. நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். அதேவேளையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், ‘நாடாளுமன்றம் நடைபெற நாங்களும் விரும்புகிறோம், ஆனால் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவாதத்திற்கு அரசு அனுமதிக்க வேண்டும்; ஆளுங்கட்சி ஒத்துழைத்தால் மட்டுமே அவையை சுமுகமாக நடத்த முடியும்’ என்று தெரிவித்தார். முன்னதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில், எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். தொடர்ந்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், ‘மதிப்பிற்குரிய அவைத் தலைவரே (துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்), குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பெருமையான தருணம். அவையின் சார்பாக, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்த அவையில் அமர்ந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும், மாநிலங்களவையின் மாண்பைக் காத்து, உங்களின் மாண்பையும் பாதுகாப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன். நமது அவைத் தலைவர் எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல் களம் அதன் ஒரு அம்சமாக இருந்தாலும், சமூக சேவைதான் முக்கிய நீரோட்டமாக இருந்துள்ளது. அவர் சமுதாயத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்துள்ளார். ஜார்கண்டில் பழங்குடியின சமூகத்தினருடன் நீங்கள் ஏற்படுத்திய பிணைப்பை கண்டு வியந்தேன். உங்களின் சேவை மனப்பான்மையையும், ஆளுநராக இருந்து புதிய உயரங்களை ெதாட்ட உங்களை அனைவரும் அறிவோம்.
நீங்கள் (சி.பி. ராதாகிருஷ்ணன்) டாலர் நகரில் (கோவை) பிறந்தீர்கள்; இருந்தபோதிலும், ஏழைகளுக்கான சேவைத் துறையாகத் தேர்ந்தெடுத்தீர்கள். உங்கள் குடும்பத்தாரிடமிருந்து நான் கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களை குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது, அவிநாசி கோயில் குளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தீர்கள். அப்போது நீங்கள், ‘யார் என்னைக் காப்பாற்றினார்கள்? நான் எப்படி பிழைத்தேன்? எனக்குத் தெரியாது; ஆனால் பிழைத்தேன்’ என்றீர்கள். கடவுள் உங்களுக்கு கருணை காட்டினார். இரண்டாவதாக, அத்வானி கோவைக்கு வருவதற்கு சற்று முன்பு அங்கு பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அறுபது அல்லது எழுபது பேர் கொல்லப்பட்டனர். அப்போது நீங்கள் மயிரிழையில் உயர் தப்பினீர்கள். சமீபத்தில் நீங்கள் காசிக்கு சென்றீர்கள்; அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தில் இருந்த நீங்கள், கடந்த காலத்தில் காசிக்கு சென்று வந்த பின்னர் அசைவ உணவை உண்பதை நிறுத்தியதாக கூறினீர்கள். நீங்கள் கங்கா அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றீர்கள். அசைவ உணவு உண்பவர்களை கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை.
ஆனால் காசி என்ற புண்ணிய பூமியின் எண்ணம், உங்கள் மனதில் வந்தது. எனவே, ஒரு எம்.பி என்ற முறையில், இதை மறக்க முடியாத நிகழ்வாக நினைவில் கொள்வேன்’ என்று பாராட்டி பேசினார். தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘மாநிலங்களவையின் தலைவராகப் பொறுப்பேற்ற உங்களுக்கு என் சார்பாகவும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்’ என்றார். தொடர்ந்து எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் மக்களவை கூடியதும் எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா கூறுகையில், ‘நாட்டின் தலைநகரம் காற்றுமாசால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மிகவும் வெட்கக்கேடான நிலைமை என்று உணர்கிறேன். நமது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சில வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு ஆய்வின்படி, இன்று 22 லட்சம் குழந்தைகளுக்கு நிரந்தர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதைப் பற்றி நாம் எப்படி சும்மா உட்கார்ந்திருக்க முடியும்?. ஒன்றிய அரசும் மாநில அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்றுமாசு மிகப்பெரிய பிரச்னைகளை பற்றி விவாதிப்போம். பாராளுமன்றம் எதற்காக? பிரச்னைகளைப் பற்றி பேசுவதும் எழுப்புவதும் நாடகம் அல்ல (முன்னதாக எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார்). பொதுமக்களுக்கு முக்கியமான பிரச்னைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை அனுமதிக்காததுதான் நாடகம்’ என்று பதிலடி கொடுத்தார்.
புதிய வழக்கால் காங்கிரஸ் விரக்தி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் ஆகியோர் மீது புதிய எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது குறித்து, பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் கூறுகையில், ‘ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பீதி, விரக்தி மற்றும் கூச்சலிடும் நிலையில் உள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் பணம் பகிரங்கமாக கொள்ளையடிக்கப்பட்டது. பெரிய ஊழல் நடந்துள்ளது. ரூ. 90 கோடி கடன்களை வெறும் ரூ. 50 லட்சத்திற்கு தள்ளுபடி செய்துள்ளது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் இதை பெரிய சதியின் ஒரு பகுதியாக செய்து அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. வெறும் உரையாற்றுவதற்குப் பதிலாக, நேஷனல் ஹெரால்டை கொள்ளையடித்ததற்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும். இவ்விசயத்தில் சோனியா காந்தி குடும்பம் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று கூறினார்.