உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜவில் சீட் கிடைக்காததால் ஆர்எஸ்எஸ் தொண்டர் தற்கொலை: இளம்பெண் தற்கொலை முயற்சி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் தற்கொலை செய்த ஆர்எஸ்எஸ் தொண்டரை தொடர்ந்து இளம்பெண் ஒருவர் இன்று காலை தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜ உள்பட அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்தநிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜ சார்பில் போட்டியிட, திருக்கண்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் கே. தம்பி என்ற ஆர்எஸ்எஸ் தொண்டருக்கு சீட்மறுக்கப்பட்டது.
இதனால் மனம் உடைந்த ஆனந்த் கே. தம்பி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதார். உள்ளூர் பாஜ தலைவர்களுக்கு மணல் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த கும்பலைச் சேர்ந்தவருக்கு சீட் கொடுத்ததால் தான் தன்னை ஒதுக்கியதாகவும் தற்கொலைக்கு முன்பு நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய தகவலில் குறிப்பிட்டிருந்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இத்தனை வருடம் இருந்ததற்காக வேதனைப்படுவதாகவும் ஆனந்த் கே. தம்பி தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பாஜவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட சீட் மறுத்ததால் பாஜவை சேர்ந்த மேலும் ஒரு இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி. பாஜவின் தீவிர தொண்டர் ஆவார். அங்குள்ள பனைக்கோட்டலா வார்டில் போட்டியிட விரும்பினார். தனக்கு எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் பிரசாரத்தையும் தொடங்கினார். ஆனால் நேற்று வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனமுடைந்தவர், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். தொடர்ந்து அவரை உறவினர்கள் மீட்டு நெடுமங்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஷாலினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.