சின்ன மம்மி ஆதரவாளர்கள் குஷியில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கோஷ்டி பூசலால் தேசிய தலைமையை சந்திக்க மாநில தலைவரின் ஆதரவாளர்கள் முடிவு பண்ணியிருக்காங்களாமே’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியில் மன்னர் மாவட்டத்தில் மேற்கு மற்றும் தெற்கு மாட்ட தலைவர்கள் மாஜி மாநில தலைவரால் நியமிக்கப்பட்டு இருந்தாங்க. இந்த 2 மாவட்ட தலைவர்களும் தற்போது இருந்து வரும் மாநில தலைவருக்கு எந்தவித ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால் மன்னர் மாவட்டத்தில் கட்சி பணிகள், ஆர்ப்பாட்டமோ, எந்தவித போராட்டமோ எதுவும் நடப்பதில்லையாம்... அப்படியே மாவட்டத்தில் ஒரு சில ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடந்தால் கூட தற்போதைய மாநில தலைவரின் ஆதரவாளர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லையாம்... இதற்கு மாஜி மாநில தலைவர் தான் காரணம் என கட்சிக்குள்ளே வெளிப்படையாகவே பேசிக்கிறாங்க.
இவர்களுக்குள் இருந்து வரும் முட்டல் மோதலால் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்க. இதனால் இந்த 2 மாவட்ட தலைவர்களை மாற்றக்கோரி மாநில தலைவரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக புகார் கடிதங்களை மேலிடத்துக்கு அனுப்பி இருக்காங்க. இதனால் இந்த புகார் மனு குறித்து விசாரணை இருக்க கூடும். விசாரணை முடிவில் எந்த மாதிரி நடவடிக்கை இருக்கும் என எதிர்பர்ப்பில் இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காவிட்டால் விரைவில் 2 மாவட்ட தலைவர்களுக்கு எதிராக தனியாக கூட்டம் போட முடிவு எடுத்திருக்காங்க. இந்த கூட்ட முடிவை தொடர்ந்து தேசிய தலைமையை கூட நேரில் சந்திக்க திட்டமிட்டு இருக்காங்க என கட்சிக்குள்ளே பரவலாக பேச்சு ஓடுகிறதாம்’’‘‘சின்ன மம்மி ஆதரவாளர்கள் குஷியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில கொங்கு மண்டல கோட்டையானவர் கிளப்பிய புயலும், அதை தொடர்ந்து அவரது கட்சி பதவிகள் பறிப்பும் அந்த கட்சி தொண்டர்களிடையே புயலை கிளப்பி இருக்குது. இந்தநிலையில, வெயிலூர் மாவட்டத்திலும் அந்த தாக்கம் எதிரொலிச்சு வருது. வெயிலூர்ல ஒரு சிலரு, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை உண்மையான அதிமுக தொண்டருங்க வரவேற்கிறோம்னு போஸ்டர்கள் ஒட்டியிருக்குறாங்க. இந்தநிலையில, கோட்டையானவரின் கொதிப்பு, வெயிலூர் மாவட்ட சின்ன மம்மி ஆதரவாளர்கள் மத்தியிலும், குக்கர்காரர் ஆதரவாளர்கள் மத்தியிலும் குஷியை ஏற்படுத்தியிருக்குதாம். நாம இப்ப கரைவேட்டி கட்ட முடியாத நிலைக்கு எடக்கானவர்தான் காரணம். எதையும் செய்ய முடியாம, ஒரு காலத்தில் தோளோடு தோள் நின்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரத்தங்கள் எல்லாம் பிரிந்து கிடக்கிறோம்.
இதுக்கு முடிவு வரணும். கட்சி ஒண்ணாகனும். அதுதான் முதல் தேவைன்னு, தங்களுக்குள் இப்போது ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வர்றாங்களாம். இதுக்கு நான்கெழுத்து இனிஷியலை கொண்ட பழைய இலைக்கட்சிக்காரர் பின்னணியில் உள்ளாராம். சமீபத்தில் சின்ன மம்மியை சந்தித்த அவருக்கு, அங்கு கிடைத்த தகவல்களும், இப்ப நடக்கிற சம்பவங்களும் ஒத்து போவதால், குஷி மூடில் வேலையை செய்து வர்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகாிலுள்ள மங்கலம் பகுதியை சேர்ந்த நில அளவைப் பிரிவினர் வசூல் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம். பெரும்பாலும் கிராமப்புறங்களை அதிகம் கொண்ட மங்கலம் பகுதியில், தங்களைத் தேடி வரும் பொதுமக்களிடம் கட் அண்ட் ரைட்டாக ஒரு கறார் தொகையை பேசியப் பிறகுதான் பணிக்கே செல்கின்றனர். அதிலும் மங்கலம் டவுன் பகுதியில் டார்ச்சர் இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கிறதாம்.
தமிழ் கடவுள் பெயர் கொண்ட இவர், நகர் பகுதியில் தனி அலுவலகத்தில் எந்தவித தொந்தரவும் இல்லாத இடத்தில் இருப்பதால் யாரையும் சட்டை செய்வதில்லை. இலைக்கட்சி பிரமுகர்களின் பின்புலத்தைக் கொண்டவர் என்பதால், மேல் அதிகாரிகளையும் கண்டுகொள்வதில்லை. பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக கிராமப்புற மக்களிடம் தமிழக அரசு எடுத்துள்ள நற்பெயரை கெடுக்க இவர் போதும் என்று இங்குள்ள சக அதிகாரிகளே குமுறுகிறார்கள். அலுவலகத்திற்கு முதியவர்கள் வந்தால் கூட நாற்காலியில் அமர சொல்வதில்லை. சிடுசிடுவென எரிந்து விழுவதால் மக்கள் இங்கு வரவே அச்சப்படும் நிலைமை இருக்கிறதாம். இலைகட்சியினருடன் மிக நெருக்கம் காட்டும் இவர், மற்ற கட்சியினரை இழுத்தடிக்கும் வேலையிலும் ஈடுபடுகிறார். இந்தத் தமிழ் கடவுளின் கைங்கர்யத்தால் மங்கலம் நகர் பகுதியில் பலரது நில அளவைகள் பாதியில் நிற்கிறது.
மக்கள் சேவைக்கென மகத்தான பணிகளை அரசு முன்னெடுத்து வரும் நிலையில், இவரது செயல் ஆளும் கட்சிக்கு கெட்ட பெயரைத் தேடித் தந்து விடுகிறதென இப்பகுதி சமூக ஆர்வலர்கள் புலம்பித்தவிக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலராத கட்சியின் தலைவரை சுற்றித்தான் தற்போது அனலடிக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஓ அதுவா…. அல்வா நகர எம்எல்ஏவாக அதிமுக தயவோடு தேர்வானவரான மலராத கட்சியின் தமிழக தலைவர் தனது பழைய கட்சி பாசத்தை மட்டும் இன்னமும் குறைவின்றி தொடர்கிறாராம். சமீபத்தில் சென்னையில் சாலை முக்கு மாஜி அமைச்சரை சந்தித்த போது கூட இருவரும் கன்னத்தில் தட்டி விளையாடும் அளவிற்கு தனது அதிமுக நட்பு வட்டத்தை தொடரும் அவர் அதே நேரம் பழைய பகை எதையும் மறக்கவில்லையாம். அதாவது அவர் அல்வா நகரில் முதன்முறையாக வெற்றி பெற்று மறைந்த அக்கட்சி தலைவியிடமும் அதிகார அம்மணியிடமும் குட்புக்கில் இடம் பிடித்து பல துறை அமைச்சராக பலமாக வலம் வந்தாராம்.
இரண்டாவது முறை வெற்றி பெற்றபோது கட்சியில் நிலைமை மாறி விட்டதாம். தென் மாவட்டத்தில் ஒரு பெரிய சமூகத்தின் அடையாளம் என தன்னை காண்பிக்க நினைத்தவருக்கு தேனிக்காரரின் எழுச்சி கடும் இடைஞ்சலை கொடுத்ததாம். அவரும் இவரை வளர விடக்கூடாது என அதிகார சின்ன மம்மியுடன் கைகோர்த்து இவரை டம்மியாக்கி விட்டாராம். அதோடு குக்கர்காரரும், தேனிக்காரரும் இணைந்து தாங்கள் மட்டுமே தங்கள் சமூகத்தின் பெரிய அரசியல் அடையாளங்கள் என்று அடையாளப்படுத்த ஆசைப்பட்ட நிலையில்தான் அல்வா எம்எல்ஏவுக்கு மாநில தலைவர் பதவி லட்டு போல் கையில் கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவர் மெதுவாக காய் நகர்த்தி முதலில் தேனிக்காரரை அவர் வழியிலேயே வெளியேற்றிய நிலையில் தற்போது குக்கர்காரரையும் சின்ன கட்சி என்று கூறி வெறுப்பேற்றி வெளியேற வைத்து வெற்றி பெற்று விட்டார் என அவரது ஆதரவாளர்கள் புளகாங்கிதம் அடைந்துள்ளனர். ஆனால் குக்கர்காரர் பாஜ தலைவரின் திட்டத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதால் டெல்லி தலைமை தன்னை ஏதும் சொல்லிவிடுமோ என அவர் தவிக்க மலராத கட்சி கூட்டணி வட்டாரத்தில் தற்போது அனலடித்துக் கிடக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.