மதுபான கொள்கை முறைகேடு வழக்கு; கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை: டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்!
இதுதொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனிடையே, அவர் மீது சிபிஐ தொடந்த ஊழல் வழக்கின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, கே.கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலையும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரவிந்த் ெகஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. என்றாலும், அந்த வழக்கில் அவர் ஜாமீன் பத்திரம் வழங்காததால், திகார் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார்.
இருந்தாலும் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.