மத்திய பேருந்து நிலையத்தில் பாரில் பதுக்கி வைத்து விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்
*போலீசார் அதிரடி நடவடிக்கை
திருச்சி : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பாரில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அரசு மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.மிலாது நபி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மதுக்கூடம் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் முதல்நாளே அரசு மதுபானங்களை வாக்கி பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஒரு அரசு மதுபான பாரில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்கு பாரின் முன்பக்க கதவுக்கு பூட்டு போட்டுவிட்டு, பாரின் சுற்றுச்சுவர் தகஷீட்டில் சிறிய ஓட்டை ஏற்படுத்தி அதில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றது தெரியவந்தது. போலீசார் வருவதை கண்டவுடன் விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து போலீசார் இரும்பு கம்பியை கொண்டு பூட்டை நெம்பி உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பெட்டி பெட்டியாக குட்டர் பாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.