லிபுலேக் கணவாய் வழியாக சீனாவுடன் வர்த்தகம் நேபாளத்தின் ஆட்சேபனையை இந்தியா நிராகரிப்பு
புதுடெல்லி: லிபுலேக் கணவாய் வழியாக வர்த்தகத்தை தொடங்குவதற்கு இந்தியா மற்றும் சீனா எடுத்த முடிவுக்கு நேபாளம் தெரிவித்த ஆட்சேபனையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. லிபுலேக் கணவாய் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவும் சீனாவும் செவ்வாயன்று ஒப்புக்கொண்டன. இதற்கு நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்த பகுதி நேபாளத்தின் பிரிக்க முடியாத பகுதி என்று நேபாளம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் இந்த பிராந்திய உரிமைகோரலை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,‘‘லிபுலேக் கணவாய் வழியாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான வெளியுறவு துறை அமைச்சகத்தின் கருத்துக்களை நாங்கள் கவனித்தோம்.
இது தொடர்பாக எங்களது நிலைப்பாடு நிலையானது, தெளிவானது, லிபுலேக் கணவாய் வழியாக இந்தியா- சீனா இடையிலான எல்லை வர்த்தகம் 1954ம் ஆண்டு தொடங்கி பல தசாப்தங்களாக நடந்து வருகின்றது. கொரோனா தொற்று மற்றும் பிற காரணங்களால் சமீபத்திய ஆண்டுகளில் வர்த்தகம் தடைப்பட்டது. இரு தரப்பினரும் இப்போது மீண்டும் அதனை தொடங்க ஒப்புக்கொண்டுள்ளோம்” என்றார்.