இணைப்புக்கு எதிர்ப்பு எடப்பாடி வாய்ஸாக உதயகுமார் வீடியோ
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: இன்றைக்கு அதிமுக, பாஜ கூட்டணியில் பிரச்னை உள்ளது, பிளவு உள்ளது என மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 முதல் எழுச்சிப் பயணத்தை தொடங்கி இதுவரை 27 மாவட்டங்களில், 47 நாட்களில், 140 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 80 லட்சம் மக்களை சந்தித்து, 8 ஆயிரம் கிலோ மீட்டர் அளவில் தனது சுற்றுப்பயணத்தை செய்து விவசாயிகள், மக்கள் அனைவரையும் சந்தித்து வருகிறார்.
இந்த எழுச்சிப்பயணத்தினால ஒரு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. தனது இயலாமையால் ஏற்பட்டுள்ள பொறாமை. இந்த பொறாமை தீயினால் தங்களை தாங்களே தடத்தை மாற்றிக்கொண்டு அதிமுகவில் ஒற்றுமை என்ற பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு விண்ணளவு உயர்ந்து கொண்டிருக்கும் செல்வாக்கை பின்னடைவு ஏற்படுத்தி விடலாம் என்ற கனவு காணும் வயிற்றில் எரிச்சல் கொண்ட மனிதர்களுக்கு எல்லாம் தோல்வியைத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் மற்றும் தமிழக மக்கள் தருவார்கள்.
எழுச்சி பயணத்தை மடைமாற்றம் செய்ய வயிற்றெரிச்சல் மனிதர்கள் இங்கே சென்றார்கள், அங்கே சென்றார்கள், அவரை சந்தித்தார்கள், இவரை சந்தித்தார்கள் என பேசி வருகிறார்கள். ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்று, தன் உயிரை கொடுத்தாவது தியாகம் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறார். இவ்வாறு பேசியுள்ளார். அதிமுகவை இணைக்க வேண்டும் என்று கூறி வரும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, செங்கோட்டையன் ஆகியோரை விமர்சித்து பெயரை குறிப்பிடாமல் உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.