ஆயுள் தண்டனை பெற்ற நர்சுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் 200 நர்சுகள் போர்க்கொடி: குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்
லண்டன்: தொடர் குழந்தைக் கொலையாளி எனத் தண்டிக்கப்பட்ட நர்ஸ் லூசி லெட்பியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சக நர்சுகளே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இங்கிலாந்தில், மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைக் கொன்றதாக நர்ஸ் லூசி லெட்பி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலைகள் நடந்த மருத்துவமனையின் தோல்விகளை ஆராய, தனியாக ஒரு பொது விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், லெட்பியின் வழக்கறிஞர் குழு, சில இறப்புகள் இயற்கையான காரணங்களால் அல்லது மோசமான சிகிச்சையால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறி புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், இந்த வழக்கு தற்போது ‘குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையத்தின்’ பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், லூசி லெட்பிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பாதுகாப்பற்றது என்றும், அது தங்களுக்குப் பெரும் கவலையை அளிப்பதாகவும் கூறி சுமார் 200 நர்சுகள் இந்த வழக்கில் சுயாதீன மறுஆய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மருத்துவர்கள், ஆலோசகர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவின் அங்கமாக இவர்கள் உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்தத் தீர்ப்பு மறுக்க முடியாத ஆதாரங்களை விட, சூழ்நிலை சாட்சியங்களையும், சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்களையுமே பெரிதும் நம்பியுள்ளது. மருத்துவமனையின் அமைப்பு ரீதியான குளறுபடிகளே குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம்’ என வாதிடுகின்றனர். இருப்பினும், லெட்பியின் மீதான குற்றச்சாட்டு, விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் நேர்மையாக நிரூபிக்கப்பட்டதாகக் காவல்துறையும், அரசு வழக்கறிஞர் சேவையும் தொடர்ந்து கூறி வருகின்றன.