நமது விடுதலை போராட்ட வீரர்கள் காண விரும்பிய ‘கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதுதான் உண்மையான விடுதலை’: முதல்வர் பதிவு
சென்னை: நமது விடுதலை போராட்ட வீரர்கள் காண விரும்பிய கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதுதான் உண்மையான விடுதலையாக இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: சக குடிமக்கள் அனைவருக்கும் எனது இனிய விடுதலை நாள் வாழ்த்துகள். மக்களாட்சி திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் மதிப்பு இருக்கிறது, வேற்றுமையே நமது பெரும் வலிமையென கொண்டாடப்படுகிற நாட்டினைக் கட்டமைப்பதற்கான மனவுறுதியை இந்நாளில் நாம் மேலும் வலுப்படுத்திக் கொள்வோம்.
உண்மையான விடுதலை என்பது மதவெறியை நிராகரிப்பது, பாகுபாடுகளுக்கு முடிவு காண்பது, விளிம்பு நிலையில் உள்ளோரைப் பாதுகாப்பது, ஒவ்வொரு மனிதரும் சமத்துவத்தோடும், மாண்போடும், மரியாதையோடும் வாழ முடிகிற வகையில் நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் காண விரும்பிய கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதுதான் உண்மையான விடுதலையாக இருக்கும்’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.