லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் ராம்குமார், அனிருத் இணை சாம்பியன்
கென்டக்கி: அமெரிக்காவில் நடந்த லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் இணை அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி நகரில் லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று வந்த இந்தியாவின் ராம்குமார், அனிருத் இணை, இறுதிப் போட்டியில் சீன தைபே வீரர்கள் யு ஹ்சியோ ஹ்சு, ரே ஹுவாங் இணையுடன் மோதியது. இப்போட்டியின் துவக்கம் முதல் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். ராம்குமாருக்கு, இது, 11வது ஏடிபி சேலஞ்சர் சாம்பியன் பட்டமாகும். அதேசமயம், அனிருத்துடன் சேர்ந்து முதல் முறையாக இப்பட்டத்தை அவர் பெற்றுள்ளார். தவிர, அனிருத், 8வது முறையாக இத்தகைய பட்டத்தை தற்போது பெற்று சாதனை படைத்துள்ளார்.