களக்காடு அருகே ஊருக்குள் உலா வரும் சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
களக்காடு: களக்காடு அருகே ஊருக்குள் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய், கடமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் வடவூர்பட்டி சாலையில் பச்சை ஆற்றின் கரையோரங்களில் இன்று சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்தன.
இதைப்பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு சென்று கால் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. விவசாயிகள் விளைநிலங்களில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் விவசாயிகளும், கிராம மக்களும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே ஊருக்குள் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.