குடியிருப்புக்குள் புகுந்து நடமாடிய சிறுத்தை: சூலூர் அருகே பொதுமக்கள் பீதி
சூலூர்: சூலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை நடமாடிய காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த வாரம் தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை நடந்து சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் 1 வாரம் காலம் தாழ்த்தினர். இந்த நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கடந்த 2 நாட்களாக சிறுத்தை அதே பகுதியில் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், பட்டாசுகளை வெடித்தும் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தொழிற்சாலைக்கு எதிர்புறம் அதாவது திருச்சி சாலைக்கு தென்புறம் உள்ள பிரபல ஓட்டல் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் சிறுத்தை நடமாடி உள்ளது. அங்குள்ள சாய்கிருபா அவென்யூவில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த விநாயகர் கோயிலில் படுத்திருந்தது. இதனால் பயந்து போன செக்யூரிட்டி விசில் ஊதி சிறுத்தையை துரத்தி உள்ளார். அங்கிருந்து வெளியே வந்த சிறுத்தை அந்த பகுதியில் நடந்து செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சிறுத்தை இருப்பதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தொடர்பான தகவல்களால் பொதுமக்கள் பீதியுடன் நடமாடி வருகின்றனர்.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடந்த வனத்துக்குள் விர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.