சடங்கே சம்பவமா மாறி போச்சு எலுமிச்சையால் வந்த விபரீதம் அப்பளமாக நொறுங்கிய புதிய கார்
புதுடெல்லி: டெல்லியில் புதிதாக வாங்கிய காரை எலுமிச்சை பழம் மீது ஏற்ற முயன்றபோது ஷோரூமிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய சோகம் அரங்கேறி உள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த பிரதீப், மானி பவார் தம்பதி புதிய கார் வாங்க முடிவு செய்து, மஹிந்திரா கார் விற்பனை ஷோரூமுக்கு சென்றனர். அந்த ஷோரூம் முதல்மாடியில் இருந்தது. அங்கு, ரூ.27 லட்சம் மதிப்பிலான தார் வகை காரை ஆசையுடன் வாங்கினர்.
பின்னர் இருவரும் கார் நல்லபடியாக ஓட வேண்டும் என வேண்டி, நான்கு சக்கரங்களுக்கு அடியிலும் எலுமிச்சை பழத்தை வைத்தனர். பிரதீப்பும், மானி பவாரும் ஏறி, மானி பவார் காரை ஓட்டுவதற்காக இருக்கையில் அமர்ந்தார். அவர்களுடன் கார் ஷோரூமின் ஊழியர் விகாஸ் என்பவரும் காருக்குள் ஏறி அமர்ந்தார். பின்னர் காரை மெதுவாக ஓட்டி எலுமிச்சை பழம் மீது ஏற்றும்படி ஊழியர் சொன்னார்.
ஆனால் புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியில் திளைத்திருந்த மானி பவார் வேகமாக காரின் ஆக்சிலேட்டரை மிதித்துள்ளார். இதனால் மின்னல் வேகத்தில் பறந்த கார் ஷோரூமின் கண்ணாடியை உடைத்து கொண்டு 15 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்து அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.