லே கலவரத்தில் கைது செய்யப்பட்ட வாங்சுக்கிற்கு பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு: லடாக் டிஜிபி பரபரப்பு குற்றச்சாட்டு
லே: லே கலவரத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு இருப்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக லடாக் போலீஸ் டிஜிபி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு வழங்கக் கோரியும் லே நகரில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 10ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 24ம் தேதி இப்போராட்டம் திடீர் வன்முறையாக மாறியது. பாஜ அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் காவலர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 4 பேர் பலியாகினர். 90 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து லே நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கலவரத்திற்கு காரணமானதாக வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் ஜோத்பூர் சிறையில் வாங்சுக் அடைக்கப்பட்ட நிலையில், லடாக் போலீஸ் டிஜிபி எஸ்.டி.சிங் ஜம்வால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: வாங்சுக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் என்ன தெரியவந்தது என்பதை இந்த நேரத்தில் வெளியிட முடியாது. விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய சுயவிவரம் மற்றும் முந்தைய போராட்டங்கள் அனைத்தும் யூடியூப்பில் கிடைக்கிறது. அதில், நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கையில் சமீபத்திய அமைதியின்மை பற்றி அவர் பேசியதால் அவரது பேச்சு வன்முறைக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை நாங்கள் கைது செய்தோம். அவர், வாங்சுக் தலைமையிலான போராட்ட வீடியோக்களை எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு அனுப்பி உள்ளார்.
இதனால், பாகிஸ்தான் உளவாளியுடன் வாங்சுக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதைப் பற்றியும் விசாரிக்கிறோம். மேலும், வாங்சுக் பாகிஸ்தானில் தி டான் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். வங்கதேசத்திற்கும் சென்று வந்துள்ளார். ஒன்றிய அரசுக்கும், லடாக் பிரதிநிதிகளுக்கும் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை வாங்சுக் தடுக்க முயன்றுள்ளார். இதற்காக சில ஆத்திரமூட்டும் வீடியோக்கள், அறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார். இவ்வாறு டிஜிபி ஜம்வால் கூறி உள்ளார். சுற்றுச்சூழல் பாதிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேச நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவராக அறியப்படும் வாங்சுக்கிற்கு பாகிஸ்தானுடம் தொடர்பிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* ஊரடங்கு தளர்வு
வாங்சுக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் லே நகரில் காவல் துறை ரோந்து சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், லே நகரில் 3 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு 4 மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குறிப்பிட்ட பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையிலும் எஞ்சிய மற்ற இடங்களில் பிற்பகல் 3.30 முதல் 5.30 மணி வரையிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் லடாக்கில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை.
* நீதி விசாரணை தேவை
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘லடாக்கில் நிலைமையை அரசு கையாண்ட விதத்தையும், அதைத் தொடர்ந்து சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. லடாக்கிற்கு 6வது அட்டவணை அந்தஸ்தை வழங்குவதாக பாஜ அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாக்குறுதி கைவிடப்பட்டுள்ளது. இதனால் ஓராண்டாகவே போராட்டங்கள் நீடித்து வருகின்றன. காங்கிரசை பொறுத்த வரையில், லடாக்கில் அமைதியைத் தவிர வேறு எதையும் தேடவில்லை. லே வன்முறையில் 4 அப்பாவி இளைஞர்களின் மரணம் மற்றும் பலருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். லடாக்கில் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் ஜனநாயகம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட வேண்டும்’’ என கூறி உள்ளார்.
* துப்பாக்கி சூடு ஏன்?
வன்முறை நடந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது ஏன் என டிஜிபி ஜம்வால் கூறுகையில், ‘‘பிற்பகலில் வன்முறை ஏற்பட்ட போது நிலைமை மிக மோசமாக இருந்தது. கட்சி அலுவலகம் தாக்கி தீ வைக்கப்பட்ட போது அங்கு 4 கான்ஸ்டபிள்கள் இருந்தனர். அவர்களை காயங்களுடன் மீட்டோம். வன்முறையாளர்களால் சுமார் 80 போலீசார் காயமடைந்தனர். எனவே எங்கள் தற்காப்புக்காகவே துப்பாக்கி சூடு நடத்தினோம். இதை செய்திருக்காவிட்டால் அன்றைய தினம் ஒட்டுமொத்த லே நகரத்தையும் கொளுத்தியிருப்பார்கள்’’ என்றார்.