சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கோரிக்கைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில்!!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா - விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.ஐயப்பன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எ.நல்லதம்பி ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா அவர்கள்: பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை தொகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயிலுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் அவர்கள்: பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மாவட்டம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலுக்கு ரூபாய் 46 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்திருக்கோயில் குடமுழுக்கிற்கு 26.01.2026 அன்று நாள் குறிக்கப்பட்டிருக்கின்றது. அன்றைய தினத்தோடு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 4,000 திருக்கோயில்களின் குடமுழுக்கு நிறைவுபெறும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா அவர்கள்: பேரவை தலைவர் அவர்களே, புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயிலின் திருப்பணிகளுக்கு ரூபாய் 46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இத்திருக்கோயிலானது காசி விஸ்வநாதர் ஆலயத்தின் தீர்த்தத்திற்கு நிகரான புனிதத்தை கொண்டதும், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமாசாஸ்திரி அவர்கள் வந்து பாடிய ஆலயம் என்ற சிறப்பினையும் கொண்டது. புதுக்கோட்டை பெரிய கோயில் என்ற பெருமைக்குரிய பிரகதாம்பாள் கோயிலுக்கு போதிய உபயதாரர்கள் இல்லாத காரணத்தினால் குடமுழுக்கு நடத்த காலதாமதம் ஆகிறது. ஆகவே அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா என்பதை தாங்கள் வாயிலாக அமைச்சர் அவர்களை கேட்டு அமைகிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அந்த திருக்கோயிலின் திருப்பணி சுமார் 13 கோடி ரூபாய் செலவில் உபயதாரர்கள் நிதி கொண்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் அந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து விரைவுபடுத்தி எவ்வளவு விரைவாக குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமோ அவ்வளவு விரைவாக குடமுழுக்கு நடத்தப்படுவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா அவர்கள்: பேரவை தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மாநகராட்சி கீழமூன்றாம் வீதி நகர மையப்பகுதியில் அருள்பாலித்து வரும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. திருப்பணிகள் தொய்வின்றி விரைவாக நடைபெற அறநிலையத்துறை சார்பாக கூடுதல் நிதி ஒதுக்கிடவும், புதுக்கோட்டை மாநகராட்சி பல்லவன் குளம் அருகில் அமைந்துள்ள வேதநாயகம் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயில் பருவமழை காலத்தில் குளம் நிரம்பி கோயிலுக்குள் மழை நீர் சென்று விடுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே அமைச்சர் அவர்கள் பல்லவன் குளத்தை தூர்வாரி மழைநீர் வடிகால்களை சரி செய்து மறுசீரமைப்பு செய்து தருமாறு பேரவை தலைவர் வாயிலாக அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஒரு கோடி 46 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதோடு உறுப்பினர் அவர்கள் கோரிய அந்த தெப்பக்குளமானது மாசிமகத்திற்கு மாத்திரம் இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொள்கிறது. மற்ற நேரங்களில் அந்த குளத்தைப் பொறுத்தளவில் மாநகராட்சி தான் பராமரிக்கின்றது. குளத்திற்கு தண்ணீர் வருகின்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருக்கின்றன. ஆகவே மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் ஒருங்கிணைந்து இந்த தீபாவளிக்கு பிறகு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு, இந்த மாசிமகம் தெப்பம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இந்து சமய அறநிலைத்துறை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.ஐயப்பன் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், விக்ரமங்கலம், வி.கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மருதப்ப சுவாமி திருக்கோயில் உள்ளது. அந்த திருக்கோயிலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குடமுழுக்கு தேதி அறிவிக்கப்பட்டது ஆனால் திருப்பணி வேலைகள் இன்றைய தேதி வரை முடியவில்லை. குடமுழுக்கு எப்போது நடைபெறும் என்பதை மாண்புமிகு பேரவை தலைவர் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்
அமைச்சர் அவர்கள்: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும். அந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திட 425 கோடி ரூபாய் அரசு நிதி பெற்று, திருப்பணிகளுக்கு எடுத்துக் கொண்ட காரணத்தினால் தான் அந்த திருக்கோயிலில் திருப்பணிகளை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அத்திருப்பணிகள் அனைத்தும் கருங்கல்லினால் நடைபெறுகின்ற பணி என்பதால் சற்று காலதாமதம் ஏற்பட்டு இருக்கின்றது. வருகின்ற தை மாதத்திலேயே அந்த திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்துவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் எ.நல்லதம்பி அவர்கள்: பேரவை தலைவர் அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களையும் வணங்கி, திராவிட மாடல் ஆட்சியில் பல ஆயிரக்கணக்கான திருக்கோயில்களில் திருப்பணிகள் குடமுழுக்குகள் செய்த அரசு, எனது திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அருள்மிகு பசலிகுட்டை முருகன் திருக்கோயில் பழமையான கோயில். அந்த திருக்கோயிலினை திருப்பணி செய்ய அமைச்சர் அவர்கள் கடந்த கூட்டத்தொடரில் அறிவித்தார்கள். எனவே அரசு நிதியும், உபயதாரர்கள் நிதியையும் பெற்று உடனடியாக திருப்பணி செய்ய முன் வருவாரா என தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் அவர்கள்: பேரவை தலைவர் அவர்களே, தமிழ் கடவுள் முருக பெருமானின் பெருமைக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி இந்த ஆட்சி என்றால் அதற்கு மாறுபட்ட கருத்து எந்த நிலையில் இருந்தும் வர எழுவதற்கு உண்டான சூழல் இல்லை. உறுப்பினர் அவர்கள் கோரிய திருக்கோயிலைப் பொறுத்தளவில் 13 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினரும், மற்றவர்களும் இணைந்து ஏழு கோடி ரூபாய் அளவிற்கு உபயதாரர்கள் நிதி வழங்கி இருக்கின்றார்கள். தேவைப்படும் இதர நிதியானது ஆணையர் பொதுநல நிதியிலிருந்து வழங்கிட பரிந்துரை வந்திருக்கின்றது. ஆகவே வெகுவிரைவாக அதற்கு ஒப்புதல் அளித்து, நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்தி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தி தரப்படும் என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.