சட்ட உதவி என்பது கருணை அல்ல; கட்டாயம்: உச்சநீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்
புதுடெல்லி: இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர், குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்திய சிறைகளில் உள்ள மொத்த கைதிகளில் சுமார் 75.8% பேர் விசாரணைக் கைதிகளே ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமை மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஜாமீன் பத்திரங்களைச் செலுத்த முடியாத காரணத்தால், இவர்கள் பல ஆண்டுகளாகக் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறையில் வாடும் அவலநிலை நீடிக்கிறது. மேலும், தங்களுக்கு உள்ள இலவச சட்ட உதவி பெறும் உரிமை குறித்து பல கைதிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததும் இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
இந்தச் சூழலில், சட்ட உதவி மற்றும் விசாரணைக் கைதிகள் தொடர்பான சீர்திருத்தங்களின் அவசியத்தை நீதிபதியின் கருத்து மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், ‘நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் குற்றம் நிரூபிக்கப்படாதவர்கள்; இது குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது. சட்ட உதவி என்பது கருணை அடிப்படையில் வழங்கப்படும் செயல் அல்ல; அது அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டாயம்.
விசாரணைக் கைதிகளில் வெறும் 7.91% மட்டுமே சட்ட உதவியைப் பயன்படுத்தியுள்ளனர். சட்டக் கல்லூரிகள் மாணவர்களுக்கு நடைமுறை சட்ட உதவி அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன் மூலம் இந்தத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குற்றவியல் நீதி அமைப்பில் பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களை கருணையுடன் அணுக வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.