சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ஊட்டி : நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ளது.
வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒவ்வொரு வட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களில் செயல்படுகிறது. ஒரு வழக்கில் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர்கள் வைத்து நடத்த முடியாவர்களுக்கு, இலவசமாக வழக்கறிஞர்கள் நியமித்து வழக்கை நடத்துவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவுகிறது. இந்த உதவியை பெற பெண்கள், குழந்தைகளுக்கு நிபந்தனைகள் இல்லை.
கொத்தடிமை தொழிலாளர்கள், சிறை காவலில் இருப்போர், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்றவாளிகள், மனநல மருத்துவமனை, மனநோய் மருத்துவமனை மற்றும் இல்லம் இவைகளில் காவலில் உள்ளவர்கள், எஸ்சி., எஸ்டி., பிரிவினர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் இலவச சட்ட சேவைகளை பெற தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
சட்டம் சார்ந்த அல்லது சட்டம் சாராத பிரச்சனையாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட நபரோ, நிவாரண கோரும் நபரோ மாவட்ட அல்லது வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம். சட்டம் சாராத பிரச்னை, கோரிக்கையாக இருந்தால் பாதிக்கப்பட்ட, நிவாரணம் கோரும் நபர் கொடுக்கும் மனு சம்பந்தப்பட்ட அரசுத்துறைக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தைரியத்துடன் அணுக வேண்டும். சட்டத்தின் துணை கொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். சட்டம் குறித்த விழிப்புணர்வு மாணவர் பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
இளம் தலைமுறையினர்களாகிய நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்ட கூடாது. 18 வயது பூர்த்தியடைந்த பின் முறையான ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே இயக்க வேண்டும்.
மாணவியர்கள் பொது இடங்களில் கேலி, கிண்டல் செய்பவர்கள், அத்துமீறுபவர்கள் குறித்து வீட்டில் பெற்றோர்களிடமும் பள்ளிகளில் ஆசிரியர்களிடமும் தயங்காமல் கூற வேண்டும். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்க தயக்கம் காட்ட கூடாது. அதேபோல் இளம் தலைமுறையினரான நீங்கள் போதை பொருட்கள் பயன்படுத்த கூடாது. இவ்வாறு அவர் பேசினார். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.