மனித உயிர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்க விஜய்: திருமுருகன் காந்தி அட்வைஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, சிலுக்குவார்பட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் பிரசார ஏற்பாட்டை தவெக நிர்வாகிகள் மிக மோசமான வகையில் செய்திருந்தனர். விஜய் முதலில் மனித உயிர்களை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். அவருக்காக வந்தவர்கள் பாதிக்கப்பட்டு இறந்தபோது உடனடியாக சந்திக்காமல், சமூக வலைதளத்தில் கூட வருத்தம் தெரிவிக்காமல் தனது உயிர் மேலானது என தப்பியோடியது கடுமையான கண்டனத்திற்குரியது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, இரண்டாம் கட்ட தலைவர்களும் தலைமறைவாகியுள்ளது மக்களின் மீதுள்ள அக்கறையின்மையை காட்டுகிறது.
இப்படிப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டில் இதுவரை நடந்ததே இல்லை. இவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக எதை செய்துவிட போகிறார்கள். கோழைத்தனமான கட்சித் தலைமை என்பதையே இது காட்டுகிறது. தவெக ரசிகர் மன்றமாக மட்டுமே உள்ளது. இச்சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தன் மீது தவறில்லை எனில் நீதிமன்றத்தில் நிரூபித்து கொள்ளட்டும் என்றார்.