இலைக்கட்சி தலைவர் ஊரில் நடக்கும் மகளிரணி குடுமிபிடி சண்டை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சுந்தரா டிராவல்ஸ் வாகன பயணத் திட்டத்தில் கடைகோடி மாவட்டம் இடம்பெறாதது இலைக்கட்சி தொண்டர்களை ரொம்பவே அதிருப்தியில் தள்ளியிருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி தலைவரான சேலம்காரர் தமிழ்நாடு முழுவதும் தனது கட்சிக்கு ஆதரவாக வாகன பிரசாரத்துல ஈடுபட்டு வர்றாரு.. ஆனால் அவரது பயண திட்டத்தில் கடைகோடி மாவட்டம் சேர்க்கப்படவில்லையாம்.. முதல்கட்ட பயண திட்டத்திலும் இல்லை, 2ம் கட்ட பயண திட்டத்திலும் கடைகோடி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டிருக்காம்.. இது, அக்கட்சியின் தொண்டர்களை அதிருப்தியடைய வைத்துள்ளதாம்.. கடைகோடி மாவட்டம் அதிமுகவில் ‘வீக்’ ஆக இருக்கின்ற மாவட்டம். இங்கு ஒன்றுக்கு இரண்டு முறை வந்தால்தான் வாய்ப்பு இருக்கும்.. ஆனால் அதனையும் செய்யாமல் இருந்தால் எப்படி? இருக்கின்ற நிர்வாகிகளாவது சேலம்காரரிடம் எடுத்து கூற வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்களாம்..
ஆனால் தனது ‘சுந்தரா டிராவல்ஸ்’ வாகனம் குறுகலான சாலைகளில் சென்று திரும்ப இயலாது என்பதால்தான் கடைகோடி மாவட்டத்தை பயண திட்டத்தில் சேர்க்கவில்லை என்று பயண திட்டம் வகுத்தவர்கள் பதில் அளித்தார்களாம்.. இருப்பினும் எப்படியும் சேலம்காரர் பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்திக்க வருவார் என்று 2ம்கட்ட தலைவர்கள் நம்பிக்கை வச்சிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பங்காளி மகனின் பவரை குறைக்கும் வேலையில் ஈடுபட்ட உளறல்காரர் கட்சியினரின் ஆதரவு இல்லாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாயிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு புகழ்பெற்ற மாவட்டத்தில், ஆதவன் ஓய்வெடுக்க செல்லும் திசையின் மாவட்டச் செயலாளராக மாஜி உளறல்காரர் இருக்கிறார். இவரது மகனான மைக் நடிகர் பெயரை பின்னால் கொண்டவர், மாநகராட்சியில் கவுன்சிலராக உள்ளார்.
மற்றொரு மகன் சென்னையில் கல்லூரி நடத்துகிறார்.. உளறல்காரரின் சகோதரர் மகனான ராஜாவின் பெயரை கொண்டவர் இலைக்கட்சியில் ஒன்றிய செயலாளராக உள்ளார். கடந்த தேர்தலில் உளறல்காரர் கடும் போட்டியை மீறியும், வெற்றி பெற்றதே இவரின் தயவால்தான். இதனால், இவர் வளர்ந்து கால் ஊன்றி விட்டால் தனக்கும், வாரிசுகளுக்கும் எதிர்காலத்தில் போட்டியாக இருப்பார் என நினைத்து, இவரை கட்டம் கட்டும் வேலையை மாஜி உளறல்காரர் செய்து வந்தார். மகன்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி, ராஜாவானவரின் செல்வாக்கை குறைப்பதற்காக அவரது ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, ஒரு ஒன்றியத்திற்கு தனது தீவிர ஆதரவாளர் ஒருவரை நியமித்து விட்டாராம்.. இது அந்த ஒன்றியத்தில் உள்ளவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.. இதனால் புதிய ஒன்றிய செயலாளருக்கு பெயரளவில் கூட யாரும் வாழ்த்து சொல்லவில்லையாம்..
பெத்த மகன்களுக்காக, பங்காளி மகனின் பவரை குறைக்கும் வேலையை மாஜி உளறல்காரர் செய்து விட்டு, கடைசியில் கட்சியினரின் ஆதரவு இல்லாததால் கடும் மன உளைச்சலுக்கு சென்று விட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரோடு, பாலம் எல்லாம் சூப்பரா இருக்குன்னு ஆபீசர்ஸ் ரிப்போர்ட் கொடுத்தாலும் வாகன ஓட்டிகள் எல்லாம் புலம்பறாங்களாமே எங்கே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில புதுசா போடற ரோட்டின் தரம் மோசமாக இருக்கிறதா அதிக அளவுல புகார் வந்திட்டு இருக்காம்.. தரக்கட்டுப்பாடு பிரிவு ஆபீசர்கள் பாலம், ரோடு என ஆய்வு செஞ்சு சூப்பரா இருக்கு என ரிப்போர்ட் தந்து விடுகிறார்களாம்.. ஆனா நிஜ நிலவரம் வேற மாதிரி இருக்குதாம்.. பாதாள சாக்கடை திட்டம் வேலை நடந்த ஏரியாவில் போட்ட ரோடு பழைய ரோட்டுடன் சேரவே இல்லையாம்.. ரோடு தரமில்லாம இருக்குதுன்னு வாகன ஓட்டிகள் புலம்புறாங்க..
சில இடங்களில் ரோடு மண்ணோட புதையுதாம்.. புது ரோட்டுல போகாதீங்க லோடு வண்டி வீலோட புதைஞ்சுரும்னு டிரைவர்கள் சொல்றாங்க.. ரோட்டில் தார் அளவும் சரியா இருப்பதில்லையாம்.. ‘கோர் கட்டிங்’ டெஸ்டும் சும்மா பேருக்கு தான் நடக்குதாம்.. ரோடு வேலை செய்யற கான்ட்ராக்டர் சொல்ற இடத்துலதான் தார், ரோடு தடிமன் அளவு டெஸ்ட் எடுக்கிறார்களாம்.. கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருக்கிற டெஸ்டிங் சென்டரிலும் போதுமான சோதனை நடத்துறது இல்லையாம்.. இதையெல்லாம் கண்காணிக்கிற ஆபீசர்ஸ் சரிவர பீல்டுக்கு போறதில்லையாம்.. ரோடு வேலை தான் மாவட்டத்தில் இப்ப பெரிய பிரச்னையா இருக்குன்னு பரவலா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் நடக்கும் மகளிரணி குடுமிபிடி சண்டை பற்றி ஏதாச்சும் தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் மகளிரணி செயலாளராக ராணி பெயரை கொண்ட ஒருவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்காங்களாம்.. தற்போது கட்சி புது ரத்தம் பாய்ச்சப்பட்டு புயல்வேகத்தில் போய்க்கிட்டிருக்கும் நிலையில், அவரால் மகளிரணியை திரட்ட முடியலன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.. இந்த நிலையில் தான் சொந்த கட்சி ஆபீஸ் திறப்பு நிகழ்ச்சிக்கு வழக்கம் போல சிங்கிளா அந்த மா.செ. வந்தாராம்.. பொதுச்செயலாளர் வரும்போது ஒரு ஐம்பது மகளிரை அழைச்சிக்கிட்டு வராம வெறுங்கையை வீசிக்கிட்டு வருவது நியாயமா? என்ற கேள்வியை கேட்டுக்கிட்டு, அவரை வெளியே நிறுத்திட்டாங்களாம்.. இதனால மனம் உடைந்துபோன அந்த மகளிரணி கண்ணில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியதாம்.. இதனை பார்த்த அவரது அடிபொடிகள் கண்ணீரை துடைச்சதோடு ஆறுதலும் படுத்தினாங்களாம்..
மம்மியோட பர்த்டேவுக்கு 3 ஆயிரம் மகளிரை அம்மாப்பேட்டையில் இருந்து கோட்டை வரை பால்குடம் எடுத்து வந்து சாதனை செஞ்சேன்.. இப்பேர்பட்ட என்னையே ஆபீசுக்குள்ளாற போக கூடாதுன்னு சொல்லிட்டாங்களேன்னு சக மகளிரணிகிட்ட சொல்லி ரொம்பவே வேதனைப்பட்டாங்களாம்.. இவரை புறக்கணிக்க காரணம், பவர் அதிகம் கொண்ட ஒரு பகுதி செயலாளருன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.. மகளிரணிக்கும் அந்த பகுதிக்கும் கோயிலில் மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், நான் யாருன்னு காட்டுறேன்று பகுதி சபதம் செஞ்சதுதான் இந்த மோதலுக்கு காரணமுன்னும் சொல்றாங்க..
எரிகிற வீட்டில் புடுங்குவது லாபம் என்பதை போல மகளிரணி பதவியை தட்டிப்பறிக்க ஐந்து பேர் தயாரா இருக்காங்களாம்.. அவர்களும் தங்களால் முடிந்தவகையில் எரிகிற தீக்கு எண்ணெய் ஊத்துறாங்களாம்... மேலும் பொதுச் செயலாளரின் காதுகேட்கும் வகையில் கோஷத்தை எழுப்புறாங்களாம்.. எந்த நேரத்திலும் மகளிரணி பதவி பறிபோகும் இந்த களேபரத்திற்கிடையில் கட்சி ஆபீஸ் திறக்கும் நிகழ்ச்சிக்கு இலைக்கட்சியின் மூத்த தலைவரான சிவந்தமலையை அழைக்கலையாம்.. இதனால அவர் ரொம்பவே அப்செட்டா இருப்பதாக அவரோட அடிபொடிகள் சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.