இலைக்கட்சி பொறுப்பாளருக்கு மரண பயத்தை காட்டிய மா.செ. தரப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஜெயிலுக்கு போனவங்கதான் கவலையா இருக்கணும்.. ஜெயிலோட உச்ச ஆபீசரே கவலையா இருந்தா எப்படி..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஜெயில் டிபார்ட்மெண்டில் உயரதிகாரி ரொம்பவே கவலையா இருப்பதுதான் தற்போதைய பரபரப்பா இருக்குதாம்.. தூங்கா நகரத்தில் இருக்கும் சிறையில் வாங்காத பொருட்களை வாங்கியதாக பல கோடிகள் லபக் செய்யப்பட்டதாக சென்ற புகாரையடுத்து அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினாங்களாம்.. இதற்கிடையில் புகாரை விஜிலென்ஸ் விசாரணைக்கு நீதிமன்றம் தள்ளிவிட்டதாம்..
அப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மோசடி நடந்தது உண்மையென தெரியவந்த நிலையில், 12 பேர் மீது எப்.ஐ.ஆர் விழுந்திடுச்சாம்.. இதில் பெண் அதிகாரி உள்பட 3 பேர் இன்னும் சஸ்பெண்டில் இருக்காங்களாம்.. விஜிலென்ஸ் ஒருபக்கம் ஆமைபோன்ற வேகத்தில் விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், துறைரீதியான விசாரணையும் நடந்து முடிந்து விட்டதாம்.. அதற்கான அறிக்கை சென்னையில் சிறையை கண்காணித்து வரும் அதிகாரியின் டேபிளில் தூங்கிக்கிட்டிருப்பதாக ஜெயில் அதிகாரிகள் சொல்றாங்க..
அந்த அறிக்கையில் உண்மை என்ற வார்த்தை இருப்பதாக அதிகாரிகள் மத்தியில் பேசிக்கிறாங்க.. அவ்வாறு உறுதி செய்யப்பட்டால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படலாம், ஐந்து ஆண்டிற்கு சம்பள உயர்வை ரத்து செய்யலாம், பதவி உயர்வை நிறுத்தி வைக்கலாம். இதில் எந்த நடவடிக்கையாகவும் இருக்கலாமாம்.. இது விஜிலென்ஸ் நடவடிக்கையை கட்டுப்படுத்தாதாம்.. இப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதால் தான் ரிப்போர்ட் டேபிளின் மேல் கொர் கொர் என்ற சத்தத்துடன் உறக்கத்தில் இருப்பதாகவும் சொல்றாங்க..
இந்த விவகாரம் இப்படியே போய்கிட்டிருக்கும் நேரத்தில் பல வருடங்களுக்கு பிறகு தூங்காநகரத்து உயரதிகாரி ஒருவர் மீதும் 17பி என்ற பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்காம்.. இதனால சஸ்பெண்டில் உள்ள 3 பேரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்காங்களாம்.. ஐயா எப்படியும் நோட்டீசில் இருந்து நழுவிடுவாரு.. அதையே பின்பற்றி நாமும் சென்றுவிடலாம் என்றிருக்காங்களாம்.. ஆனால் சிறையின் உச்சஅதிகாரி ரொம்பவும் நேர்மையானவராம்.. அவரிடம் இருந்து தப்பிக்கவே முடியாதுன்னு நேர்மையான காக்கிகள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொடிய புடிச்சிக்கிட்டு தலைவர் வாழ்க முழக்கமிட சொன்னதை கேட்டு மகளிர் கொந்தளிச்சிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் இலைக்கட்சி தலைவரின் 2ம் கட்ட பிரசாரத்தை ஜொலிக்க வைக்க தடபுடலான திட்டம் போட்டாங்களாம்.. ஆனால் கீழ்மட்ட நிர்வாகிங்க காசு அமுக்க பிளான் போட்டதால் கூட்டம் சேரலையாம்.. குறிப்பா அதிக தொண்டர்கள் இருக்கிற ஏரியாவுல பெண்கள் கூட்டம் வரலையாம்.. கடுப்பான மேலிட நிர்வாகிகள், தலைவர் வர்றப்ப கூட்டம் குவியனும்னு கறாரா சொல்லிட்டாங்களாம்..
இதனால் வட்ட கழக குரூப் ஏரியாவுக்குள்ள ரவுண்ட்ஸ் போனாங்களாம்.. வீடு வீடா போயி, நம்ம கட்சி கூட்டத்திற்கு வாங்க, தலைக்கு 200, பிரியாணி தர்றோம். பஸ் ரெடியா இருக்குது. கூட்டத்துல கொடிய புடிச்சுக்கிட்டு தலைவர் வாழ்கன்னு சொல்லணும் என சொன்னாங்களாம்.. இதை கேட்ட பெண்கள் கோபமாயிட்டாங்களாம்.. எங்கள பாத்தா காசுக்கு கூவுற ஆளுங்க மாதிரி தெரியுதா, இனி இந்த பக்கம் வராதீங்கன்னு எச்சரித்து அனுப்பிட்டாங்களாம்.. மாஜி மந்திரி பெல் ஏரியாவுல பெண்கள் கூட்டம் அதிகமா வரும்னு எதிர்பார்த்தாங்களாம்..
ஆனா நினைச்சது நடக்கலையாம்.. கடைசி நேரத்துல டாஸ்மாக் பார், டீக்கடை என தேடி புடிச்சு கெடச்ச ஆளுங்கள வர வெச்சு பிரியாணியோட குவார்ட்டர் கொடுத்து சமாளிச்சிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சர்ச்சையில் சிக்கிய பெண் அதிகாரி மீது ஆதாரங்களுடன் புகார்கள் பறக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் மாவட்டம் வனம் நகராட்சியில் பெண் கவுன்சிலர் காலில் ஊழியர் விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மூல காரணம் அங்கு பணிபுரியும் முக்கிய பெண் அதிகாரி தானாம்..
நகராட்சிகளை கவனிக்கும் மண்டல அலுவலருக்கு இது தெரிய வரவே, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரிக்கு கடுமையாக டோஸ் விட்டாராம்.. தற்போது இதன் பின்னணியில் நடந்த சதி திட்டம் அம்பலமாகி இருக்கிறதாம்.. அதாவது டோஸ் வாங்கிய பெண் அதிகாரிதான், சிசிடிவி பதிவுகளை இலைக்கட்சி கவுன்சிலருக்கு கொடுத்து ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக அங்குள்ள ஊழியர்கள் மத்தியில் வெளிப்படையாகவே பேச்சுகள் அடிபடுகிறதாம்..
ஜூம் மீட்டிங்கில் டோஸ் வாங்கிய பெண் அதிகாரியின் செயல்கள் குறித்து ஆதாரங்களுடன் கரை வேட்டிகள் ஆளும் தலைமைக்கு புகார்களாக அனுப்பி இருக்கிறார்களாம்.. ஏற்கனவே தமிழக தலைநகரிலிருந்து பந்தாடப்பட்டு வனத்துக்கு வந்தவர், அடுத்ததாக எங்கு பறக்கப் போகிறாரோ என்ற சலசலப்பு தற்போது நகராட்சிக்குள் நிலவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சியை சீரமைக்க நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் ஷட்டர் மூடப்பட்ட மண்டபத்தில் இருந்து வேட்டியை மடித்து கட்டிக்கிட்டு ஓட்டம் பிடிச்சாராமே எதுக்காம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சென்னை புறநகரில் இலைக்கட்சியை சீர்படுத்தும் வகையில் அக்கட்சி தலைவர் தர்மபுரியை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவரை நியமிச்சாராம்.. அவரும் நேரம் காலம் பார்க்காமல் மா.செ.விடம் கலந்து கொள்ளாமல் புதிய நிர்வாகிகளை நியமிச்சதாக சொல்றாங்க.. அதோடு கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகளை ஒன்று திரட்டிக்கிட்டிருக்காராம்.. இதற்கிடையில் புதிய நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பாளர் பக்கம் சரிந்த நிலையில், மா.செ. முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாகவும் கட்சிக்காரங்க சொல்றாங்க..
நம்மூரில் வந்து நமக்கு எதிராகவே எப்படி கெத்துக்காட்டலாம் என்ற ஆத்திரத்தில் மா.செ. தரப்பினர் ரொம்பவே ஆத்திரமாக இருக்காங்களாம்.. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை மண்டபம் ஒன்றில் பொறுப்பாளர் கூட்டியிருக்காரு.. தேர்தலில் ஜெயிப்பது எப்படி என பேசிக்கிட்டிருந்த நேரத்தில் திடீரென ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் திபுதிபுவென உள்ளே புகுந்துட்டாங்களாம்.. மண்டபத்தின் ஷட்டரையும் குளோஸ் செஞ்சிட்டாங்களாம்..
இதனை சற்றும் எதிர்பாராத பொறுப்பாளர் நடுநடுங்கி போயிட்டாராம்.. அதே நேரத்தில் சற்றும் தயங்காமல் வேட்டியை மடிச்சிக்கிட்டு கதவை திறந்துக்கிட்டு ஆளைவிட்டால் போதும் சாமியோ என்ற அலறலுடன் ஓட்டம் பிடிச்சிருக்காரு.. அந்நேரத்தில் பெரும்பாக்கத்தில் இருந்து இன்னொரு டீம் உள்ளே புகுந்திருக்கு.. இதன்பிறகே நடக்க இருந்த மோதல் முடிவுக்கு வந்ததாம்.. இந்த பரபரப்பான காட்சியை பார்த்த பொறுப்பாளருக்கு உயிர் பயம் ஏற்பட்டிருக்காம்..
இந்த விவகாரம் இலைக்கட்சி தலைவரின் காதுக்கு சென்றிருக்காம்.. சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் புறநகரில் உள்ள ரெண்டு தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை ஏற்படுமுன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.. அதோடு பொறுப்பாளரின் அச்சத்தை போக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் அவருக்கு எஸ்கார்டு கொடுத்து அழைச்சிக்கிட்டு போறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.