இலைக்கட்சி தலைவரை அடிக்கடி சந்திக்கும் மலராத கட்சி நிர்வாகியின் மர்மம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘எஸ்ஐஆர் சிறப்பு முகாம் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததாமே இரண்டு மாஜி அமைச்சர்களின் கோஷ்டிபூசல்..’’ என்று அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் ஆணையம் சார்பில் எஸ்ஐஆர் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவியாக கடலோர மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கட்சிகள் சார்பில் வாக்குச்சாவடிகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்களாம்... இதில் இலை கட்சி சார்பில் மாஜி அமைச்சர் மணியானவர், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தனது ஆதரவாளர்களை மட்டும் தான் நியமித்திருக்காரு. மற்றொரு மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் ஒருவரு கூட நியமிக்கவில்லை. இதனால் அந்த மாஜி அமைச்சர் அவர் மீது உச்சகட்ட டென்சில் இருக்காரு. இலை கட்சியில் 2 மாஜி அமைச்சர்களுக்கு இடையே இருந்து வந்த கோஷ்டிபூசல் தற்போது இதன் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக சேலத்துக்காரரை நேரில் சந்தித்து மணியானவர் பற்றி அடுக்கடுக்கான புகார் தெரிவிக்க மற்றொரு மாஜியானவர் முடிவு செய்திருக்காரு. இந்த டாப்பிக் தான் கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவரை அடிக்கடி சந்திக்கும் மலராத கட்சி நிர்வாகியின் மர்மம் என்ன..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரை மிரட்டி மலராத கட்சி கூட்டணிக்குள் இழுத்துக்கொண்ட விவகாரம் ஊரறிந்த விஷயம்.. டெல்லி உள்துறை மந்திரி ஐந்தாறு மாதத்துக்கு முன்பு கூட்டணியை அறிவிக்கப்போவதாக சொல்லிக்கிட்டு வந்தாரு.. தனக்கு தெரியாமல் கூட்டணியா என்ற கேள்வியோடு கோபமடைந்த தைலாபுரத்து தோட்டத்துக்காரர் மகனின் தலைவர் பதவியை பறிச்சிட்டாரு.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ வாய்பொத்தி மவுனமாக இருந்த காட்சியை பார்த்த தொண்டர்கள் தலைவர் முழு அடிமையாகிவிட்டார் என அங்கலாய்த்தாங்களாம்... அதே நேரத்தில் இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இலைக்கட்சி தலைவர் பெயரை சொல்வதற்கே மலராத கட்சி ரொம்பவே தயங்கினாங்களாம்.... ஒன்றிய நிதி மந்திரியை முதல்வர் வேட்பாளராக கொண்டு வருவதுதான் மலராத கட்சியோட அஜண்டாவாம்.. இதற்கு குக்கர்காரர், தேனிக்காரர், கோபிக்காரர், சின்னமம்மி ஆகியோர் ஒத்துக்கிட்டாங்களாம்.. அதையெல்லாம் வெளியே சொல்லாம வச்சியிருக்காங்களாம்.. இதனை இலைக்கட்சிக்காரர் தெரிந்திருந்தாலும் வெளியே சொல்லாம சிரித்துக்கிட்டிருக்காராம்.. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மலராத கட்சியோட துணைத்தலைவர் ஒருவர் அவரை சந்திச்சி எரிச்சலை ஏற்படுத்துவதாக கட்சிக்காரங்களே சொல்லிக்கிட்டிருக்காங்க..
மாஜி போலீஸ்காரர் மாநில தலைவராக இருந்தநேரத்தில் நியமிக்கப்பட்டவராம் அந்த துணைத்தலைவர். அப்படித்தான் ஒருமுறை மலராத கட்சியின் கல்யாண நிகழ்ச்சியில், மூத்த நிர்வாகியை மேடையிலேயே தள்ளிவிட்டாராம்.. இதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என மாங்கனி மலராத கட்சியினர் கடும் எதிர்ப்பை காட்டியிருக்காங்க.. அதன்பிறகு இந்த துணைத்தலைவரோட இருக்கும் உறவை வெட்டிவிட்டுட்டாங்களாம்.. மாங்கனி மாநகர் வந்தாலும் கண்டுகொள்வதில்லையாம்.. இதனால திட்டம்போட்ட அந்த துணைத்தலைவரோ அவ்வப்போது இலைக்கட்சி தலைவரை சந்திச்சி பேசிக்கிட்டு போறாராம்.. ஆனால் அவரது கட்சிக்காரங்களோ இந்த சந்திப்பு பற்றி சிரிப்பாய் சிரிக்கிறாங்க.. இவருக்கு மேலிடம் எந்தவிதமான அசைமெண்டும் கொடுக்கல.. எங்களது புறக்கணிப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல், நானும் இருக்கேன் என்பதை காட்டிக்கொள்ளும் வகையில் நானும் ரவுடி தான் என அவர் சொல்லிக்கிட்டுபோறாரு.. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோன்னு சொல்லிக்கிட்டு ஓட்டம் பிடிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோட்டைவிட்ட யூனியன் தரப்பால் கொந்தளிப்பில் உள்ளூர்வாசிகள் உள்ளார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரி யூனியனில் காலாவதி மருந்து விவகாரம் பூதாகரமானதாம். மாஜி இயக்குனர்கள், மருந்தாளுனர் என 12 பேர் மீது வழக்கு பாய, கைதில் சிக்கிய பிரபலங்கள் எல்லாம் ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து ஜாமீனில் வெளியே வந்து விட்டார்களாம். லஞ்ச ஒழிப்பு காக்கிகள் போலி மருந்து நிறுவன நிர்வாகிகளை தேடிய நிலையில் 6 ேபர் ஐகோர்ட்டை அணுகி முன்ஜாமீன் வாங்கி விட்டார்களாம். சிறையில் மீதமுள்ள 3 பேரும் அடுத்தடுத்து வெளியே வருவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி இருக்கிறார்களாம். இதனால் அரசு தரப்பு என்னதான் செய்கிறது என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் முன் வைத்து உள்ளார்களாம். மக்களின் உயிரோடு விளையாடியவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய அரசு தரப்பு கோட்டை விட்டது ஏன் என்ற கொந்தளிப்பு உள்ளூர்வாசிகளிடம் பரவலாக எழுந்துள்ளதாம். இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்ற பேச்சுதான் தற்போது யூனியனில் பரவலாக உள்ளது..’’ என்கிறார் விக்கியானந்தா.