தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிநவீன லீட்லெஸ் பேஸ்மேக்கர் பொருத்தம்: அப்போலோ மருத்துவமனை சாதனை
சென்னை: 80 வயதுடைய ஆண் மருத்துவ பயனாளருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றுடன் நாள்பட்ட சிறுநீரக நோயினால் டயாலிசிஸ் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. வயது முதிர்வால் உண்டாகும் இதய அடைப்பினால் வழக்கத்திற்கு மாறாக இதயம் மெதுவாக துடிப்பது, அடிக்கடி சுயநினைவு இழப்பது போன்ற பிரச்சினைகள் அவருக்கு இருந்தன.
வழக்கமான பேஸ்மேக்கர்கள் பொருத்தப்பட்டால் அவருக்கு நோய் தொற்று ஏற்படும் ஆபத்தும் அதிகமிருக்கும் என்பதால், அதி நவீன மருத்துவ நடைமுறையான ‘லீட்லெஸ் பேஸ்மேக்கர்’ சிகிச்சை முறையைச் செய்ய அப்போலோ மருத்துவ நிபுணர் குழு முடிவு செய்து வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஏவிஇஐஆர் டுயல் சேம்பர் பேஸ்மேக்கர் அடுத்த தலைமுறை கார்டியாக் பேசிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இதய அறுவை சிகிச்சை ஆகும்.
வழக்கமான பேஸ்மேக்கர் சிகிச்சையில் லீட்ஸ் மற்றும் சரிஜிக்கல் பாக்கெட் தேவை. ஆனால் இந்த நவீன ஏவிஇஐஆர் டுயல் சேம்பர் பேஸ்மேக்கர், லீட்ஸின் தேவையில்லாமல் குறைந்தபட்ச ஊடுருவும் கேதெடர் அடிப்படையிலான நுட்பத்தின் மூலம் நேரடியாக இதய சேம்பர்களில் பொருத்தப்படுகிறது. ஏவிஇஐஆர் அமைப்பானது, துல்லிய கண்காணிப்பு, வேகத்தை ஒருங்கிணைக்கிறது. இது மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்கிறது.