முன்னணி நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கெடுபிடி படத்தின் வியாபாரத்தில் பங்கு பெற்று நடிக்க வேண்டும்: வரம்புமீறி விமர்சித்தால் நடவடிக்கை வெப்தொடர்களில் நடிக்க தடை
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2025ம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம், நேற்று சென்னை எழும்பூரில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு: தமிழ் படங்களில் பணியாற்றும் நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலர், தயாரிப்பாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு மாறாக, வெப்தொடர்களில் அதிகமாக நடிக்கிறார்கள். இதனால், பொதுமக்களிடம் படங்கள் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. இதனால் திரைத்துறைக்கு மட்டுமின்றி, அரசுக்கும் வருமான இழப்பு ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் வெப்தொடர்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதவர்களுக்கு சங்கங்கள் பணி ஒத்துழைப்பு வழங்கக்கூடாது, சம்பந்தப்பட்டவர்களின் படங்களை திரையிடக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. தமிழ் படவுலகில் ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மற்ற மாநிலங்களில் இருப்பது போல் நடிகர்கள், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் ‘பட வியாபாரத்தில் பங்கு’ என்ற அடிப்படையில் நடிக்க வேண்டும்.
தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வரம்புமீறி செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது திரைப்பட அமைப்புகள் இணைந்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும். முன்னணி நடிகர்களின் படங்கள் 8 வாரங்கள் கழித்தும், அடுத்த நிலை நடிகர்களின் படங்கள் 6 வாரங்கள் கழித்தும், சிறுமுதலீட்டு படங்கள் 4 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும். 2026-2029ம் ஆண்டுகளுக்கான தயாரிப்பாளர் சங்க தேர்தல், வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும்.
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் பொறுப்பேற்று தேர்தல் தேதியையும், வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்களையும் அறிவிப்பார். தமிழ் படங்களின் தலைப்புகள் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் மட்டுமே பதிவு செய்வது குறித்து ஒன்றிய, மாநில அரசுகளுடன் பேசி சீர்திருத்தம் கொண்டு வரப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் சில தீர்மானங்களுக்கு அர்த்தம் புரியவில்லை என்று அதிருப்தி தெரிவித்து தயாரிப்பாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.