மாநில தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக குமுறும் மாஜி போலீஸ்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மலராத தேசிய கட்சியில் இணைந்த சமத்துவ நடிகர் மீண்டும் தென் மாவட்ட தொகுதியை குறி வைத்துள்ளாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சமத்துவ நடிகர் 2011ம் ஆண்டு மம்மி இருந்த போது இலை கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அப்போது அவரது கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தென் மாவட்டமான ‘காசி’யில் முடியும் தொகுதியில் களம் கண்ட சமத்துவ நடிகர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பின்னர் மம்மி மறைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கலைத்து விட்டு, தனது ஆதரவாளர்களுடன் மலராத தேசிய கட்சியில் ஐக்கியமானார்.
தேசிய கட்சியில் இணைந்த பின்னர் மலையான மாநில தலைவரை மாற்றும் முயற்சியின்போது அந்த பதவியை குறி வைத்து காய் நகர்த்தினார். அந்த ரேஸில் இருந்தாலும் தேசிய தலைமை அல்வா மாவட்ட எம்எல்ஏவை மாநில தலைவராக்கி விட்டது. இந்நிலையில் இலை கட்சியுடன் மீண்டும் மலராத தேசிய கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதனால் சமத்துவ நடிகர் தனது பழைய தொகுதியை மீண்டும் கேட்கிறாராம்..
மலராத தேசிய கட்சி அந்த மக்களவை தொகுதியில் தொடர்ந்து களம் கண்டுள்ளது.. அதை மனதில் வைத்துக்கொண்டும், தான் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்ததை சுட்டிக் காட்டியும் தேசிய தலைமையிடம் சீட் கேட்கிறாராம் சமத்துவ நடிகர். இதனால், அவரது தென் மாவட்ட ரசிகர் பட்டாளம் கொண்டாட்டத்தில் உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சொகுசு வாகனம் இரண்டு புல்லட்சாமி வாங்கிய ரகசியம் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சின்னஞ்சிறிய மாநிலத்தில் புல்லட்சாமி ஆட்சி நடத்தி வருகிறார். இவர், சட்டசபைக்கு வருவதற்கே ராகுகாலம், எமகண்டம் உள்ளிட்ட நேரம் காலம் பார்த்து வருவாராம்.. சட்டசபைக்கு வந்தால், ஏழை மக்கள் கூட அவரை எளிதில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கலாம். அந்தந்த மனுக்கள் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார். இவரது பாதுகாப்பு வாகனம் கூட, இவரது வாகனத்துக்கு பின்னால் தான் வர வேண்டும் என்பது உத்தரவாம்.. இதனால் இவர் எளிய முதல்வர் என்றே அழைப்பார்கள்.
ஆனால், இந்த முறை ஆட்சியில் வருமானம் கொட்டோ கொட்டு என கொட்டுகிறதாம்... கடந்த மூன்று மாதத்தில் ரெண்டு சொகுசு வாகனத்தை வாங்கி உள்ளாராம்.. இரவு நேரங்களில் நகரத்தை சுற்றும்போது சொகுசு வாகனத்தில் தான் வலம் வருகிறாராம் புல்லட்சாமி.. தற்போது இது சர்ச்சை ஆகி இருக்கிறது. ரெண்டு சொகுசு வாகனங்களை வாங்கியது எப்படி? என மாஜி நிர்வாகி சாமி மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
இதுகுறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன் என புல்லட்சாமியும் முழங்கி உள்ளாராம்.. பெண் பெயரை ஆண் பெயராக வைத்து ‘னா’ என முடியும் என்பவர், புதுவையின் ஒயிட் டவுனில் பல கோடி மதிப்புள்ள சர்ச்சைக்குரிய இடத்தை புல்லட்சாமி தலையிட்டு ‘னா’வுக்கு முடித்து கொடுத்தாராம்.. இதற்கு பரிசாக ஒரு கோடியில் கார் வாங்கி கொடுத்தாராம்..
இதுபோன்று அரசு மானியத்துடன், பிரபல ஓட்டல் நிறுவனம் மேலும் ஒரு ஓட்டலை கட்டிக் கொண்டு இருக்கிறதாம்.. இதற்கு பரிகாரமாக ரூ.80 லட்சத்தில் மற்றொரு காரை வாங்கி கொடுத்துள்ளதாம் என்ற ரகசியம்தான் தற்போது மாநில முழுவதும் ஹை டாப்பிக் ஆக உலாவி வருதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிரதமர் மோடி தட்டிக்கொடுத்தும் கூட, கட்சியின் மாநில தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக ஆதரவாளர்களிடம் மாஜி போலீஸ்காரர் புலம்பினாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சியின் மாஜி தலைவரை தற்போதைய தலைவர் முற்றிலும் ஓரங்கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறாராம்.. தலைவர் பதவி இழந்ததும் தேசிய பதவி, இணை அமைச்சர் பதவி கிடைக்கும்னு கனவு கண்டு வந்த நிலையில் அதை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற மாஜி தலைவரோட எதிர் கோஷ்டிகள் அடுக்கடுக்கான புகார்களை டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்து எந்த பதவியும் கிடைக்காம தடுத்துவிட்டார்களாம்..
அதோடு இல்லாம தலைவர் பதவியை வைத்துக்கொண்டு கடந்த காலத்துல உருட்டல், மிரட்டல் மூலமாக சம்பாதித்த பணத்தை பினாமி பெயரில் எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார் என்ற விவரங்களையும் பட்டியல் போட்டு டெல்லி தலைமைக்கு தட்டிவிட்டதால் டெல்லி தலைமை ஒதுக்கியே வைத்துள்ளதாம்.. இந்த சூழலில் மான்செஸ்டர் மாநகர்க்கு பிரதமர் வருகையையொட்டி வேலைகளை கவனிக்க தற்போதைய தலைவர் ஒரு குழு அமைத்தாராம்..
அந்த குழுவில் மாஜி தலைவர் பெயர் இல்லையாம்.. ஆனா மாஜி தலைவருக்கு போட்டியா இருக்கிற தேசிய பெண் தலைவர் பெயர் குழுவில் இடம் பெற்றிருந்தாராம்.. இதை கேட்டதும் மாஜி தலைவர் செம டென்சன் ஆகிவிட்டாராம்.. அதோடு இல்லாம விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கும் நிகழ்விலும் மாஜி தலைவர் கடைசி இடத்தில்தான் நிற்க வைக்கப்பட்டாராம்..
பிரதமர் தோளில் தட்டிக்கொடுத்தும் கூட, தொடர்ந்து தன்னை கட்சியின் மாநில தலைமை திட்டமிட்டே புறக்கணிச்சிட்டு வருதேன்னு தன்னோட ஆதரவாளர்கள் கிட்ட ரொம்பவே புலம்பினாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் குதிக்க தனது ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்காராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகியான மாஜி அமைச்சரான வைத்தியானவர் அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வர்றாராம்.. அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் களத்தில் இறங்க வைத்தியானவர் முடிவு செய்து இருக்காரு..
இதற்கான வேலைகள் ரகசியமாக நடந்து வருது.. எது நடந்தாலும் களத்தில் நிற்பது உறுதி என அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்து இருக்காரு. மற்றபடி ‘அனைத்து வேலைகளையும்’ இப்போது இருந்தே கவனிக்க ஆரம்பித்துள்ளாராம்.. இந்த தகவல் தற்போது சேலத்துக்காரர் கவனத்துக்கு சென்றுள்ளதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.