அர்மீனியாவை அல்பேனியா என்று குறிப்பிட்ட டிரம்பின் உளறல் பேச்சை கிண்டலடித்த தலைவர்கள்: வீடியோ வைரலால் பரபரப்பு
கோபன்ஹேகன்: அர்மீனியாவுக்குப் பதிலாக அல்பேனியா என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தவறாகக் குறிப்பிட்டதை, ஐரோப்பிய தலைவர்கள் கேலி செய்து சிரித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பதவிக் காலத்தில் அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட உதவியதாகக் கூறி வருகிறார். ஆனால், இது குறித்துப் பேசும்போதெல்லாம், அவர் தொடர்ந்து அர்மீனியாவுக்குப் பதிலாக ‘அல்பேனியா’ என்றே குறிப்பிடுவது வழக்கம். கடந்த 2024 செப்டம்பரில் தொலைக்காட்சி நேர்காணலிலும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடனான செய்தியாளர் சந்திப்பிலும் இதே தவறை அவர் மீண்டும் மீண்டும் செய்தார்.
இதுபோலவே, கம்போடியாவுக்கும் அர்மீனியாவுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார். இந்நிலையில், கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில், டிரம்பின் இந்தத் தவறு மீண்டும் விவாதப் பொருளானது. இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த அல்பேனிய பிரதமர் எடி ராமா, டிரம்பை கிண்டலடிக்கும் வகையில் பேசினார். அவர், ‘அதிபர் டிரம்ப் அல்பேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்திற்கு நீங்கள் எங்களை வாழ்த்தாததால், எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நகைச்சுவையாகக் கூறினார். இதைக் கேட்டு மூன்று தலைவர்களும் சிரித்து மகிழ்ந்தனர். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் சர்ச்சையான நிலையில், இது ‘நண்பர்களுடனான ஜாலியான தருணம்’ என்றும், ஊடகங்கள் இதை பெரிதுபடுத்துவதாகவும் அல்பேனிய பிரதமர் ராமா விளக்கமளித்துள்ளார்.
`அல்பேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்திற்கு நீங்கள் எங்களை வாழ்த்தாததால், எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நகைச்சுவையாகக் கூறினார். இதைக் கேட்டு மூன்று தலைவர்களும் சிரித்து மகிழ்ந்தனர்.