முன் அனுமதியின்றி வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தால் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளை அதிரடி
மதுரை: முன் அனுமதியின்றி நீதிமன்ற புறக்கணிப்பு செய்தால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விதி விலக்குகள் தவிர்த்து பிற காரணங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இருந்தால் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, மாவட்ட நீதிமன்றங்களில் முதன்மை மாவட்ட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
முன் அனுமதி பெறாமல் நீதிமன்ற புறக்கணிப்பில் நடத்தினால் அது சட்டவிரோத போராட்டமாக கருதப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து சட்டவிரோத நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், போராட்டத்துக்கு காரணமான வழக்கறிஞர்களை வழக்கறிஞர் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.