வக்கீல் பாதுகாப்பு சட்டம் உருவாக்க கோரி வழக்கு: முன்வரைவை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: தமிழ்நாடு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க கோரிய வழக்கில், சட்டம் தொடர்பான முன்வரைவை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் வழக்கறிஞர்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. பார் கவுன்சில் தரப்பில், ‘‘பாதுகாப்புச் சட்டம் தொடர்பான முன்வரைவு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இவ்வழக்கில் தமிழ்நாடு சட்டத்துறை செயலர், இந்திய மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை, நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் சட்டம் தொடர்பான முன்வரைவை தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக். 17க்கு தள்ளி வைத்தனர்.