பாசன நீர் பைப் அமைத்ததில் முன்விரோதம்; வக்கீல் மீது மண் வெட்டியால் தாக்குதல்: வக்கீல் மீது மண் வெட்டியால் தாக்குதல்
தாராபுரம்: பாசன நீர் பைப் அமைத்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வக்கீல் மீது மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தாராபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வக்கீல் சங்க மாஜி செயலாளர் ராஜகோபால் (35). இவரது அலுவலகம் கச்சேரி சாலையில் உள்ளது. இவரது விவசாய தோட்டம் மூலனூர் அடுத்துள்ள மொங்கநல்லாம்பாளையத்தில் உள்ளது. அங்கு பாசன நீர் பைப் அமைத்துள்ளது தொடர்பாக இவருக்கும், இவரது சித்தப்பாவும், முன்னாள் ஊராட்சி தலைவருமான துரைசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், நேற்று துரைசாமி, ராஜகோபாலின் பைப் லைனை துண்டித்துள்ளார்.
தகவல் அறிந்ததும் ராஜகோபால் நேற்றிரவு காரில் புறப்பட்டார். வழியில் காரை மறித்து கண்ணாடியை மண்வெட்டியால் அடித்து நொறுக்கி ராஜகோபாலையும் துரைசாமி தாக்கினார். இதில் காயம் அடைந்த ராஜகோபால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். சம்பவம் அறிந்ததும் மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.கார்வேந்தன் தலைமையில் 50 வக்கீல்கள் அங்கு குவிந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இரவு 10 மணிக்கு தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் சங்கத்தின் அவசர கூட்டம் சங்கத் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் நடந்தது.
இதில் வழக்கறிஞர் ராஜகோபாலை தாக்கிய ஊராட்சி தலைவர் துரைசாமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் வழக்கறிஞர்கள் 2 நாட்கள் அதாவது இன்றும் (16ம் தேதி), நாளையும் (17ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.