அங்கீகாரம் பெறாமல் சட்டப்படிப்பு; உத்தரபிரதேச பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், போலீஸ் மோதல்
பாரபங்கி: உத்தரபிரதேசம் பாரபங்கியில் உள்ள ஸ்ரீ ராம்ஸ்வரூப் நினைவு பல்கலைக்கழகம் இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரமின்றி சட்டப்படிப்புகளை கற்று தருவதாக ஆர்எஸ்எஸ்சின் மாணவர் பிரிவான பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், பல்கலைக்கழகம் சட்டவிரோத கட்டணம் வசூலிப்பதாக ஆர்எஸ்எஸ்சின் மாணவர் பிரிவான பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஏபிவிபி மாணவர் அமைப்பினர் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவல்நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.