நோ யுவர் ரைட்ஸ்!
பெண்களுக்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் தேவையான ஒன்றாகவே உள்ளது. சட்டம் என்ன சொல்கிறது, எந்த சூழலில் என்ன செய்யலாம், எங்கே உதவி பெறலாம் என்ற கேள்விகள் பலருக்கும் தெளிவாகத் தெரியாது. இதைப் புரியவைக்கவும், உடனடியாக தகவல் கிடைக்கச் செய்யவும் உதவுகிறது ‘‘நோ யுவர் ரைட்ஸ்’’ (Know Your Rights) மொபைல் செயலி. இந்த செயலி வழக்கமான சட்ட மொழியில் அல்லாமல் எளிமையான, புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உரிமைகள் பற்றி சொல்லுகிறது. குடும்ப வன்முறை, பணியிடத் தொந்தரவு, திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, பெண்கள் காவல் துறையுடன் தொடர்பு கொள்ளும் விதம், குழந்தை பராமரிப்பு, பாலியல் குற்றங்களுக்கான புகார் செய்யும் நடைமுறை எனப் பல பகுதிகளுக்கான விரிவான தகவல்கள் இதில் உள்ளன.செயலியின் சிறப்பம்சம், சட்ட பிரிவுகள் மட்டுமல்லாமல், எங்கே தொடர்பு கொள்ள வேண்டும், அவசர எண்கள், அரசாங்க ஆதரவு மையங்கள், பெண்கள் காவல் நிலையங்கள் போன்றவற்றின் விவரங்களையும் ஒரே இடத்தில் தருகிறது. ஒருவர் சட்ட உதவி பெறுவதற்கு முன் எந்த ஆவணங்கள் தேவை, எந்த இடத்துக்கு போக வேண்டும் என்பதையும் இந்தச் செயலியில் தெரிந்து கொள்ளலாம்.