சென்னையில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!!
சென்னை: சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்து வந்தவர் இல.கணேசன். இவர் சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். கடந்த 8ம் தேதி காலையில் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று பிற்பகலில் அவரது உடல் இறுதி ஊர்வலத்துடன் கொண்டு செல்லப்பட்டு 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. நாகலாந்து முதல்வர் நைபியு ரியோ, அம்மாநில தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இல.கணேசன் மறைவுக்கு நாகாலாந்து மாநிலம் 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.