போன வருஷம் பரோட்டாவும் சென்னாவும்.. இந்த வருடம் பொடிதோசை: பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட பிரசாதம்!!
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்கதர்கள் முளைப்பாரி, தீச்சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு 21,000 பொடி தோசைகள் பிரசாதமாக நள்ளிரவில் வழங்கப்பட்டது. ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி மற்றும் புரட்டாசி முதல் வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 19ஆம் தேதி திருவிழா தொடங்கியது.
நாள்தோறும் பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. நேற்று இரவு பக்கதர்கள் முளைப்பாரி, தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு படையல்களுடன் சாம பூஜை நடைபெற்றது. அப்போது பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து திருவிழாவில் கலந்து கொண்ட 10,000க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு சுமார் 21,000 பொடி தோசைகள் அன்னதானமாக வழங்கப்பட்டன.
சுவையான சட்னி சாம்பாருடன் வழங்கப்பட்ட பொடி தோசைகளை சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு சுவைத்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் போன்றவற்றை அன்னதானமாக வழங்குவதே பொதுவான வழக்கம். ஆனால் பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு பிரசாதமாக பரோட்டா வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பொடி தோசை வழங்கப்பட்டது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.