கேத்தி பாலாடா-காட்டேரி சாலையில் மழைக்காலங்களில் மண் சரிவு அபாயம்: தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தல்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளன. இது போன்ற சாலைகளில் மழைக்காலங்களில் கன மழை பெய்யும் போது குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி குன்னூர் சாலை, காட்டேரி சாலையில் மண் சரிவுகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காட்டேரி முதல் ஊட்டி வரையிலான புறவழிச்சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சேலாஸ் பகுதியில் இருந்து கேத்தி பாலாடா வரையில் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. சாலையில் இரு புறங்களிலும் உள்ள பெரிய அளவிலான மண் திட்டுக்கள் கரைக்கப்பட்டன.
ஆனால், அப்பகுதியில் தொடர்ந்து தடுப்புச் சுவர் அமைக்கப்படாத நிலையில் மழைக்காலங்களில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. தற்போது சாதாரண மழை பெய்தால் கூட ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில், அதற்கு முன்னதாக சாலையில் மண் சரிவு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.