1059 கோயில்களுக்கு சொந்தமான 8,119 கோடி ரூபாய் மதிப்புள்ள 8,022.48 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
கும்பகோணம்: திராவிட மாடல் ஆட்சியில் 3,896 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 8,119 கோடி ரூபாய் மதிப்புள்ள 1059 கோயில்களுக்கு சொந்தமான 8,022.48 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 2009ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 16 ஆண்டுகளுக்கு பின் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கொடியசைத்து கும்பாபிஷேகத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்தனர்.
பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இன்று மாலை மகாபிஷேகம், இரவு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: திராவிட மாடல் ஆட்சியில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் இன்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இன்று மட்டும் 31 கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று வரை 3,896 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இது ஜனவரி மாதத்துக்குள் 4 ஆயிரத்தை கடக்கும். இதுவும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை. 80 தேர்கள் புதிதாக செய்யப்பட்டுள்ளன. ரூ.40 கோடியில் 600 கோயில்களில் உள்ள தேர்களுக்கு கொட்டகை அமைத்து கொடுத்துள்ள பெருமை திராவிட மாடல் ஆட்சியை சேரும். இதுவரை ரூ.8,119 கோடி ரூபாய் மதிப்புள்ள 1059 கோயில்களுக்கு சொந்தமான 8,022.48 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை 12,577 கோயில்களில் ரூ.7,147 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை உபயதாரர்களால் ரூ.1,557 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 12,017 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது இந்த ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கை. இதுபோன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் முதல்வர் 2026ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவார். ஆதிகும்பேஸ்வரர் கோயில் மொட்டை கோபுரத்தின் மீது ராஜகோபுரம் கட்ட ரூ.3கோடியே 65லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.