லாலு குடும்பத்தில் உச்சக்கட்ட மோதல்; எனக்கு எதிராக 5 குடும்பங்கள் சதி: தேஜ் பிரதாப் பதிவால் பீகார் அரசியலில் பரபரப்பு
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ், சமீபத்தில் கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் 12 ஆண்டுகளாக உறவில் இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானதே இதற்குக் காரணம். ஆனால், தேஜ் பிரதாப் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், தனக்கு எதிராக நடக்கும் பெரிய சதியே இதற்கு காரணம் என்றும் கூறியிருந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ‘டீம் தேஜ் பிரதாப் யாதவ்’ என்ற புதிய அரசியல் அமைப்பைத் தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஐந்து சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், தேஜ் பிரதாப் யாதவ் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெரிய சதித்திட்டத்தின் மூலம் எனது அரசியல் வாழ்க்கையை முடிக்க ஐந்து குடும்பங்கள் ஒன்றிணைந்துள்ளன. எனது பத்து ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்வில் நான் யாருக்கும் துரோகம் இழைத்ததில்லை. ஆனால் இந்த ஐந்து குடும்பங்களும் எனது அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை முழுமையாக அழிக்க எல்லா முயற்சிகளையும் செய்துள்ளன.
விரைவில் அந்த ஐந்து குடும்பங்களின் முகங்களையும், குணங்களையும் மக்கள் முன் கொண்டு வருவேன். அவர்களின் ஒவ்வொரு சதியையும் அம்பலப்படுத்தப் போகிறேன்’ என்றும் அவர் சூளுரைத்துள்ளார். விரைவில் பீகார் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தனது எதிரிகளை ‘ஜெய்ச்சந்த்’ (துரோகி) என்ற வார்த்தையால் தேஜ்பிரதாப் குறிவைத்துத் தாக்கி பேசி வருகிறார். மேலும், தனது தம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவை அத்தகைய துரோகிகளிடமிருந்து விலகி இருக்குமாறும் அவர் எச்சரித்துள்ளார். ஐந்து குடும்பங்கள் என அவர் குறிப்பிட்டிருப்பதால், பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.