லாலு பிரசாத் குடும்பத்தில் வெடிக்கும் மோதல்; ரோகிணியை தொடர்ந்து மேலும் 3 சகோதரிகள் வெளியேறினர்: டெல்லியில் மிசா பாரதி வீட்டில் தஞ்சம்
பீகார் தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தில் மோதல் வெடித்துள்ளது. தேஜஸ்வியாதவுடன் சண்டை போட்டு ரோகிணி ஆச்சார்யா வெளியேறிய நிலையில், லாலுவின் மேலும் மூன்று மகள்களும் பாட்னாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு சென்றுள்ளது பீகார் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ராஜ் லட்சுமி யாதவ் ஆகிய மூவரும், தங்கள் குடும்பத்தினருடன் பாட்னாவில் உள்ள ‘10, சர்குலர் ரோடு’ இல்லத்திலிருந்து இரவு திடீரென வெளியேறினர். அவர்கள் நேராக டெல்லிக்கு பயணம் செய்து, அங்குள்ள தங்களது மூத்த சகோதரியான மிசா பாரதியின் இல்லத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
குடும்பத்தில் நீடிக்கும் இந்த குழப்பங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கும், சோர்வுக்கும் ஆளானதால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால், தற்போது பாட்னா இல்லத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இது லாலு குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னை குறித்து பேசிய நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் உமேஷ் குஷ்வாஹா கூறுகையில்,’ இது ஒரு குடும்ப விஷயம். அவர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்றார். பாஜ பீகார் மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ ஒரு மகளுக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதை மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
லாலு யாதவின் மகள் தெருக்களில் வந்து இதைப் பற்றிப் பேச வேண்டியிருந்தால், அவர் இதை பொறுத்துக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை. லாலு யாதவ் அல்லது ரோகிணி ஆச்சார்யா அவமரியாதை செய்யப்பட்டால், மக்கள் கூட அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இன்று தேஜஸ்வியின் பெயர் மக்களுக்குத் தெரிந்தால், அது லாலு யாதவ் மற்றும் ராப்ரி தேவியால் தான்’ என்றார்.
இது குடும்ப பிரச்னை: லாலு விளக்கம்
ரோகிணி மற்றும் 3 மகள்கள் வீட்டை விட்டு வெளியேறியது குறித்து நேற்று பாட்னாவில் லாலுபிரசாத் கூறுகையில், ‘‘இது ஒரு குடும்ப உள் விவகாரம், குடும்பத்திற்குள் தீர்க்கப்படும். அதைச் சமாளிக்க நான் இருக்கிறேன்’’ என்றார்.