2020 தேர்தலில் வெற்றிப் பெற்ற 75 தொகுதிகளில் 55 தொகுதிகள் ‘அவுட்’: பீகாரில் லாலு கட்சிக்கு பின்னடைவு
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில், கடந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளையும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இம்முறை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சி பெற்ற இந்த மாபெரும் வெற்றி, பீகார் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அக்கட்சி வென்ற 75 தொகுதிகளில் 47 தொகுதிகளை, 10,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி தனது செல்வாக்கை நிலைநாட்டியது.
இந்த வெற்றி, 2025 தேர்தலிலும் தொடரும் என அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் 2025 தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. கடந்த முறை வென்ற 75 தொகுதிகளில், 73ல் அக்கட்சி மீண்டும் போட்டியிட்ட நிலையில், அவற்றில் 55 தொகுதிகளை (எம்எல்ஏக்கள்) இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த முறை 10,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, ‘பாதுகாப்பான தொகுதிகள்’ எனக் கருதப்பட்ட 31 இடங்களை இம்முறை ராஷ்ட்ரிய ஜனதா தளம் இழந்துள்ளது, அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் தொகுதிகள் பெரும்பாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, குறிப்பாக ஐக்கிய ஜனதா தளத்திற்குக் கிடைத்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தால் கடந்த தேர்தலின் வெற்றி அலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியாதது, அக்கட்சியின் படுதோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.