ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சோளிங்கர்: சோளிங்கர் அருகே ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த்(45), கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் அமுதன்(9, சுதன்(8). முறையே 4, 3ம் படித்து வந்தனர். தாளிக்கால் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் இளஞ்செழியன்(10), 5ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய சிறுவர்கள் 3 பேரும், அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். பின்னர், ஆடைகளை கழற்றி கரையில் வைத்து விட்டு ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் 3 பேரும் திடீரென நீரில் மூழ்கி அடுத்தடுத்து பரிதாபமாக பலியாகினர்.
இதற்கிடையில், வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். அப்போது, ஏரிக்கரையில் சிறுவர்களின் ஆடைகள் இருப்பதை பார்த்த அவர்கள் சந்தேகம் அடைந்து ஏரியில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது, அமுதன், சுதன் மற்றும் இளஞ்செழியன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. சிறுவர்களின் சடலங்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று 3 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.