லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு போராட்டம் லே நகரம் பற்றி எரிகிறது: 4 பேர் பலி: 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்; பா.ஜ அலுவலகத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்கள்
* பாதுகாப்பு வீரர்கள் மீது கல்வீச்சு; பல வாகனங்கள் எரிப்பு
* பல இடங்களில் தீ வைப்பு; தடை உத்தரவு அமல்
* கண்ணீர் புகை குண்டு வீச்சு; போலீஸ் தடியடி
லே: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு லே நகரில் திடீரென இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பா.ஜ அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகி விட்டனர். 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று 370வது பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அங்கு முதல்வராக உமர்அப்துல்லா உள்ளார். லடாக் பகுதி துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரை மீண்டும் தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை போல், லடாக்கில் வசிக்கும் மக்களும் லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி வருகின்றனர். ஒன்றிய அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால் 4 மாதங்களாக பேச்சுவார்த்தை முடங்கியதால் இந்த மாதம் தொடக்கத்தில் லடாக்கில் இந்த போராட்டம் தீவிரமடைய தொடங்கியது.
கடந்த 10ம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட பலரும் உண்ணாவிரதத்தை தொடங்கினர். லடாக்கை தனி மாநிலமாக ஒன்றிய அரசு அங்கீகரிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களை போல் லடாக்கை அரசியலமைப்பு அட்டவணை 6ல் சேர்க்க வேண்டும் என்று கூறினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் செரிங் அங்சுக் (72) மற்றும் தாஷி டோல்மா (60) ஆகியோர் மயங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இருப்பினும் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லே உச்ச கூட்டமைப்பு, கார்கில் ஜனநாயக கூட்டணி அமைப்புகளுடன் அக்.6ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த லே உச்ச கூட்டமைப்பில் உள்ள இளைஞர்கள் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பாஜ அலுவலகத்தின் மீது கல்வீசி சூறையாடினர். மேலும் பா.ஜ அலுவலகத்தையும் தீ வைத்து எரித்தனர்.
அதை தொடர்ந்து லே நகரம் முழுவதும் வன்முறை வெடித்தது. பல இடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இளைஞர்கள் வீதி வீதியாக சென்று கொந்தளித்த நிலையில் வாகனங்கள், கடைகளை எரித்தனர். என்டிஎஸ் நினைவு மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களும் லே நகரத்தின் தெருக்களில் பேரணியாகச் சென்று ஆறாவது அட்டவணை மற்றும் மாநில அந்தஸ்தை ஆதரித்து கோஷங்களை எழுப்பினர். அவர்கள் ஹில் கவுன்சிலின் தலைமையகம் மீது கற்களை வீசியதால் நிலைமை மோசமடைந்தது.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. லே நகரம் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த வன்முறையில் இதுவரை 4 பேர் பலியாகி விட்டனர். 70 பேர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். மேலும் கூடுதல் பாதுகாப்பு படைகள் லே நகரில் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் லடாக் பகுதி முழுவதும் பதற்றமாக உள்ளது.
* லடாக் விழா ரத்து
ஆண்டு தோறும் 4 நாட்கள் லடாக் விழா நடைபெறும், இந்த ஆண்டு லடாக் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இன்று நிறைவு விழா நடைபெற இருந்தது. ஆனால் வன்முறை காரணமாக லடாக் விழாவை ரத்து செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
லே நகரில் வன்முறை வெடிக்க காரணம் என்ன?
* லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். லடாக்கை 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பது கோரிக்கை
* செப்டம்பர் 10 முதல் பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 15 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
* இதில் இருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதனால் கொந்தளித்த இளைஞர்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
* 5 பேருக்கு மேல் கூட தடை
லே நகரில் இளைஞர்கள் போராட்டத்தால் பாஜ அலுவலகம் மற்றும் பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுழுட்டதால் லே முழுவதும் பற்றி எரிந்தது. கரும் புகை மண்டலம் உருவானது. இதையடுத்து லே முழுவதும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதைத் தடைசெய்ய பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவின் பிரிவு 163 இன் கீழ் தடை உத்தரவுகளை லடாக் நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
* உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் தாமதம் குறித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில்,‘ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்ததிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பாஜ தாமதப்படுத்தி வருகிறது. வெற்றி பெற முடியாமல் போனது பாஜவின் துரதிர்ஷ்டம். இருப்பினும், இங்குள்ள மக்களை அதற்காக தண்டிக்க முடியாது. பாஜ அரசாங்கத்தை அமைக்காததால் மக்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இது மக்களுக்கு அநீதியானது. மாநில அந்தஸ்துக்கு பாஜவிடமிருந்து எதிர்ப்பு வருகிறது’ என்றார்.
* ஆறாவது அட்டவணை என்றால் என்ன?
திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் அசாம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, நிர்வாகம், ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வகை, மாற்று நீதித்துறை வழிமுறைகள் மற்றும் தன்னாட்சி கவுன்சில்கள் மூலம் பயன்படுத்தப்படும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்கிறது. இதே கோரிக்கையை லடாக் மக்கள் முன்வைத்துள்ளனர்.
* 15 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் வாங்சுக்
லடாக்கை தனி மாநிலமாக அறிவிக்க கேட்டு காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்.10 முதல் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். ஆனால் நேற்று லே நகரில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அப்போது தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றிய வாங்சுக், அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறுகையில்,’ இளைஞர்கள் தீ வைப்பு மற்றும் மோதல்களை நிறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் எங்கள் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறோம். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். வன்முறையில் உயிர்கள் இழந்தால் எந்த உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றிபெறாது’ என்று தெரிவித்தார்.