லடாக் மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: பிரதமர் மோடி லடாக் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி லடாக்கில் நடந்த போராட்டத்தில் கடந்தவாரம் வன்முறை வெடித்தது. இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள்.
இதில் கார்கில் போர் வீரர் சேவாங் தார்ச்சினும் ஒருவர். இந்நிலையில் பிரதமர் மோடி லடாக் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தென் அமெரிக்காவில் நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தார்ச்சினின் தந்தையின் வீடியோவை இணைத்து, ‘‘அப்பா ராணுவத்தில், மகனும் ராணுவத்தில், தேசபக்தி அவர்களது ரத்தத்தில் ஓடுகின்றது.
ஆனால் பாஜ அரசு அவர் லாடாக்கிற்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் நின்றதால் இந்த துணிச்சலான தேசத்தின் மகனை சுட்டுக்கொன்றது. தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியை கேட்கின்றன. தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி இதுதானா? லடாக்கில் நடந்த இந்த கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.