குந்தா, கெத்தை அணைகளில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்றி தூர் வார கோரிக்கை
அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின்நிலையங்களில் மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய படுகிறது.
இதில், குந்தா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின்சார நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின்சார உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அனைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதை தொடர்ந்து வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது இந்நிலையில், குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களின் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா மற்றும் கெத்தை அணைகள் தூர் வாராததால் அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதிகள் தேங்கியுள்ளது. குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடும் நிலை காணப்படுகிறது.
அணைகளில் தேங்கியுள்ள சேறு, சகதிகள் காரணமாக பருவமழை காலங்களில் பெறப்படும் மழை நீரை அணைகளில் முழுமையாக சேமித்து வைக்க முடியாததுடன் கோடைகாலங்களில் நீர் வரத்தின்றி மின் நிலையங்களில் தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்வதில் தடங்கல் ஏற்படும் நிலை உள்ளது.
இதையடுத்து குந்தா மற்றும் கெத்தை அணைகளில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்ற அணைகளை முழுமையாக துார் வார வேண்டும் என மின்வாரியத்தினர் மட்டுமின்றி பல்வேறு பொதுநல அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.