முதுமலை தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி; ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற ரகு உள்பட 5 யானைகள் பங்கேற்பு
இதில் ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு, பொம்மி மற்றும் கிருஷ்ணா, கிரி, மசினி போன்ற யானைகளுக்கு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கும்கி பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், பொம்மி குட்டி யானைக்கு பாகனின் சொல் பேச்சை கேட்கும் பயிற்சியான காதை பிடித்து கொண்டு அதே இடத்தில் சுற்றுவது, நீளமான சங்கிலியை தரையில் போட்டு அதன் மேல் நடப்பது போன்ற பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ரகு யானைக்கு இரண்டு கால்களில் நிற்பது, இரண்டு கால்களையும் தூக்கி உப்பர் பரா, நீட் பைட் மற்றும் சங்கிலியை தரையில் போட்டு அதன் மேல் நடப்பது போன்ற பயிற்சியும், மசினி யானைக்கு தரையில் உட்காருவது, மண்டியிட்டு அமர்வது, படுத்துக் கொண்டே நோட்டமிடுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கிருஷ்ணா மற்றும் கிரி யானைக்கு காட்டு யானையை பிடித்து பின்புறம் முட்டி தள்ளி லாரியில் ஏற்றுவது உள்ளிட்ட அனைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிரி, கிருஷ்ணா, ரகு யானைகளுக்கு தங்கள் மனநிலையை சீராக வைத்துக்கொள்ள ஒரு மரத்துண்டில் நான்கு கால்களையும் அதன் மேல் வைத்து நிற்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் காட்டு யானைகளை விரட்டுவது மற்றும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.