கும்பமேளா கொண்டாட்டத்தால் ஆறுகள் நாசம்; மூடநம்பிக்கையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை
புதுடெல்லி: மதத்தின் பெயரால் நடைபெறும் விழாக்களால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைவதாகவும், இதனைத் தட்டிக்கேட்கும் சீர்திருத்தவாதிகள் குறிவைக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்க்க வலியுறுத்தினாலும், நாட்டில் மூடநம்பிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நரேந்திர தபோல்கர் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த காரணத்தாலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
இத்தகையச் சூழலில் நடைபெற்ற தார்குண்டே நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபே எஸ். ஓகா, அறிவியல் மனப்பான்மை இல்லாதது குறித்தும், மதத்தின் பெயரில் நடக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘கும்பமேளா மற்றும் விநாயகர் சிலை கரைப்பு போன்ற நிகழ்வுகளால் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்கள் மிகக்கடுமையாக மாசடைகின்றன; புனிதத்தின் பெயரில் சுற்றுச்சூழலை நாசமாக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மத சுதந்திரம் என்பது சுற்றுச்சூழலையோ அல்லது பொது சுகாதாரத்தையோ சீரழிப்பதற்கு அனுமதியளிக்கவில்லை’ என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். ஓட்டு வங்கி அரசியலுக்காகப் பல கட்சிகள் மதக் குழுக்களைத் திருப்திப்படுத்துவதாகவும், இதனால் தேவையான சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் தயங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், ‘சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில் நீதிபதிகள் மக்கள் விருப்பத்திற்கோ அல்லது மத உணர்வுகளுக்கோ இடம் கொடுக்காமல், உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய அவர், ‘வருங்கால சந்ததியினருக்குப் பள்ளிக்கல்வியிலேயே அறிவியல் சிந்தனைகளைக் கற்றுத் தர வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.