கும்பகோணம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி வயலுக்குள் பாய்ந்தது
கும்பகோணம் : கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரை வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாபநாசம் தாலுகா வாழ்க்கை கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சுவர் அமைக்கும் பணிக்கு தேவையான சிமெண்ட் கலவையை தஞ்சாவூரில் இருந்து வாழ்க்கை கிராமத்தின் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கரையோரம் கலவை இயந்திர லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது, சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கரையோரம் இருந்த வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநர் ஆரோக்கியராஜ் (45) படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், வயலில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை லாரியை கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இது குறித்து கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.