குமரி முழுவதும் விடிய விடிய மழை; அணைகளுக்கான நீர்வரத்து கிடுகிடு உயர்வு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
* கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கான நீர் வரத்தும் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக மழை நீடித்து வரும் நிலையில், வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த நிலை காரணமாக நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்தது. கடலோர பகுதிகள், மலையோர பகுதிகளிலும் கனமழை நீடித்தது. ஏற்கனவே நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில், இரவில் பெய்த கனமழையால் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்ததுடன் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கடுக்கரை, பூதப்பாண்டி, காட்டுப்புதூர், கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 7 மணி வரை கன மழை நீடித்தது.
குலசேகரம், திருவட்டார், கீரிப்பாறை, திற்பரப்பு, அருமனை, களியல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலும் கனமழை நீடித்ததால், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் இன்றும் 5 வது நாளாக பணிக்கு செல்ல வில்லை. தொடர் மழையால் கட்டுமான தொழிலும், முடங்கி உள்ளது. ஆரோக்கியபுரம், கோவளம், குளச்சல் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இன்றும் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. பாலமோர், சிற்றார் 1, பேச்சிப்பாறை, புத்தன் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழையால் அணைகளுக்கான நீர் வரத்து இன்று காலை கிடு,கிடு வென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 1286 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேரம் செல்ல, செல்ல நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால், அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் 42.3 அடியாக உள்ளது.
அணையில் இருந்து 492 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர் வரத்து அதிகரித்தால், அணைக்கு வரும் தண்ணீரை உபரிநீராக அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 66.81 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு, 1597 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 1, 7.67, சிற்றார்2, 7.77, பொய்கை 21.7 அடியாக உள்ளன. மாம்பழத்துறையாறு அணை 30.84 அடியாகவும், முக்கடல் 22.5 அடியாகவும் உள்ளன. முக்கடல் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைகளுக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தங்குமிடங்கள், தேவையான உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், போர்வைகள், படுக்கைகள் தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகம் வரும் பகுதிகளிலும், கால்வாய் கரைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ள கலெக்டர் அழகு மீனா அறிவுறுத்தி உள்ளார். தொடர் மழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, வள்ளியாறு, பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளில் குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, வேடிக்கை பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அழகு மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலமோரில் 87.4 மி.மீ. பதிவு
இன்று காலை 6 மணி நிலவரப்படி பாலமோரில் அதிகபட்சமாக 87.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதாவது 8 செ.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்துள்ள மழை அளவு ( மில்லி மீட்டரில்) வருமாறு :
கொட்டாரம் 49.4
மயிலாடி 40.2
நாகர்கோவில் 40.6
கன்னிமார் 20.8
ஆரல்வாய்மொழி 25
பூதப்பாண்டி 12.6
முக்கடல் 24.2
பாலமோர் 87.4
தக்கலை 30
குளச்சல் 21
இரணியல் 18
அடையாமடை 27.2
குருந்தன்கோடு 38.6
கோழிப்போர்விளை 44.2
மாம்பழத்துறையாறு 38
ஆணைக்கிடங்கு 37.6
சிற்றார் 1, 72.8
சிவலோகம் 45.2
களியல் 40.2
குழித்துறை 46.4
பேச்சிப்பாறை 72.4
பெருஞ்சாணி 69.4
புத்தன் அணை 68.6
சுருளகோடு 45.4
திற்பரப்பு 58.4
முள்ளங்கினாவிளை 37.8
சூறைக்காற்றில் சரிந்து விழுந்த மரங்கள், மின் கம்பம்
குமரி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் திடீரென சூறைக்காற்றும் வீசியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நாகர்கோவில் வடசேரி ஓட்டுப்புற தெருவில் உள்ள ஸ்டேடியம் நகரில் மரம் முறிந்து விழுந்து அந்த பகுதியில் உள்ள உயரழுத்த மின் கம்பம் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக வீடுகள் எதுவும் இல்லாததால், எந்த வித உயிர் சேதமும் ஏற்பட வில்லை. இது குறித்து அறிந்ததும் மின் வாரிய பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் சென்று மரத்தை வெட்டி அகற்றினர். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோரும் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
குமரி மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42 அடியை இன்று 24.10.2025 அன்று எட்டி உள்ளது. அதிக மழையின் காரணமாக அணை நீர் மட்டம் 46 அடியை அடையும் பட்சத்தில் அதற்கு மேல் வரும் உபரி நீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து கோதையாற்றில் திறந்து விடப்பட்டு களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, இரையுமன்துறை வழியாக தேங்காப்பட்டணத்தில் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு தாமிரபரணி ஆற்றின் (குழித்துறை ஆறு) கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.