மதுரையில் போட்டிக்கு அழைத்து சென்று குமரி பள்ளி மாணவி பலாத்காரம்: டேக்வாண்டோ மாஸ்டர் தற்கொலைக்கு முயற்சி
நாகர்கோவில்: மதுரைக்கு போட்டிக்கு அழைத்து சென்றபோது 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் பதிவு செய்த வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீப். ராமன்புதூர் பகுதியில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி மையத்தின் கீழ் பணியாற்றி வருகிறார். மேலும், தனது நண்பரான யோகா மாஸ்டர் உதவியுடன் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பகுதி நேரமாக டேக்வாண்டோ பயிற்சி அளித்து வருகிறார். இது தவிர டேக்வாண்டோ போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை வெளியூர்களுக்கு அழைத்து செல்வதும் வழக்கமாம். அதன்படி கடந்த 11, 12ம் ஆகிய தேதி மதுரையில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் அமைப்பு நடத்திய டேக்வாண்டோ போட்டிக்கு குமரியில் இருந்து பள்ளி மாணவிகளை பிரதீப் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, பெற்றோருடன் வந்த மாணவிகளை அனுப்பிய பிரதீப், தனியாக வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை மட்டும், மதியம் மற்றொரு மேட்ச் இருப்பதாக கூறி தனது அறையில் தங்க வைத்துள்ளார். அப்போது மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தாக தெரிகிறது. பின்னர், மாணவியுடன் குமரிக்கு திரும்பினார். மதுரையில் இருந்து வந்த பின்னர் மாணவி சரியாக சாப்பிடாமல், பிரமை பிடித்தது போல் இருந்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி மாணவி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சிஅடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை அறிந்த பிரதீப் பயத்தில் தற்கொலைக்கு முயன்று, ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், சம்பவம் நடைபெற்ற இடம் மதுரை நாகமலை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், பிரதீப் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கை மேல் விசாரணைக்காக மதுரை நாகமலை புதுக்கோட்டைக்கு மாற்றியுள்ளனர். அதைத்தொடர்ந்து மேல் நடவடிக்கைகளை மதுரை போலீசார் மேற்கொள்வார்கள். மேலும், காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தற்கொலை நாடகத்தை பிரதீப் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
எச்சரிக்கை தேவை
குமரியில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டு போட்டிகளின் பயிற்சியாளர்கள், மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவது நடைபெற்றுள்ளது. அண்ணா விளையாட்டரங்க பயிற்சியாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குமரியில் மேலும் ஒரு சில பயிற்சியாளர்கள் இதுபோன்ற பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த மற்றொரு டேக்வாண்டே பயிற்சியாளரும் இதுபோன்று மாணவிகளுக்கு தனது மையத்தில் பாலியல் தொல்லை தருவதாக புகார்கள் உள்ளன. தங்கள் குடும்ப கவுரவம் கருதி பலரும் புகார் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது திருமணம் முடிந்த பின்னரும், இதே லீலையை தொடரந்துள்ளார். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியின் தாயாரிடம், சம்பந்தப்பட்ட டேக்வாண்டோ பயிற்சியாளரின் மனைவி மன்னிப்பு கேட்கும் ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் அப்போது பரவியது. பெற்றோர்கள் மட்டுமின்றி பள்ளி நிர்வாகங்களும் விளையாட்டு பயிற்சியாளர்களின் பின்புலம் அறிந்து பணிக்கு அமர்த்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.