குமரியில் அடர்ந்த வனங்களை வாகனத்தில் சென்று ரசிக்க காளிகேசம் முதல் முத்துக்குளிவயல் வரை `ஜங்கிள் சபாரி’ திட்டம்: வன ஆர்வலர்கள் வலியுறுத்தல்
நாகர்கோவில்: அடர்ந்த வனப்பகுதிகளை வாகனங்களில் சென்று ரசிக்கும் `ஜங்கிள் சபாரி’ திட்டத்தை காளிகேசம் முதல் முத்துக்குளிவயல் வரை செயல்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். காடுகளில் வாகனங்களில் சென்று வனவிலங்குகளைப் பார்த்து, இயற்கையை அனுபவிக்கும் ஒரு அற்புதமான சாகச திட்டத்துக்கு `ஜங்கிள் சபாரி’ என்பார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், அடர்ந்த வன பகுதிகளை ரசிக்கும் ஜங்கிள் சபாரி திட்டம் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் அடர்ந்த வன பகுதியாக இருப்பது முத்துக்குளிவயல் ஆகும். ஆண்டு முழுவதும் மழை பொழிவை கொண்ட பகுதியானது குமரியின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது.
குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமில்லாத ஒரு இடமாக உள்ள முத்துக்குளிவயல், பல்வேறு இயற்கை அதிசயத்ைத கொண்டதாகும். குமரி மாவட்டத்தில் உள்ள பாலமோர் மற்றும் முத்துக்குளிவயல் பகுதிகள் மலைப்பாங்கான இடங்களாகும். இந்தப் பகுதிகளை இணைக்கும் வகையில், கீரிப்பாறை வழியாக பாலமோர் மற்றும் முத்துக்குளிவயல் செல்லும் அப்பர் கோதையாறு சாலை அமைந்துள்ளது. இதில், பாலமோர் எஸ்டேட் மலையோர அடிவாரப் பகுதியாக உள்ளது. குமரி மாவட்டத்தில் மிகவும் குளிர்ந்த பிரதேசமாக முத்துக்குளிவயல் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. முத்துக்குளிவயலில் இருந்து அப்பர் கோதையாறு செல்ல முடியும். இப்பகுதி கடுமையான பனிப்பொழிவு, உறைபனி மற்றும் ஆண்டு முழுவதும் மழை போன்ற சீதோஷ்ண நிலைகளைக் கொண்டுள்ளது. இதனால், முத்துக்குளிவயலை குமரியின் காஷ்மீர் என்று கூட அழைக்கின்றனர்.
தடிக்காரன்கோணம் அருகே உள்ள காளிகேசம் என்ற இடத்திலிருந்து, பாலமோர், முத்துக்குளிவயல் வழியாக சின்ன குற்றியாறு, திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு, மாஞ்சோலை, மணிமுத்தாறு, பாபநாசம் மற்றும் அகஸ்தியர் மலை வரை செல்ல முடியும். பாலமோர் பகுதியில், பழமையான பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலை உள்ளது.எனவே முத்துக்குளி வயலை மையமாக வைத்து காட்டு பயணம் அல்லது காட்டுப் பகுதியில் விலங்குகளைப் பார்க்கும் பயணம் என அழைக்கப்படும் `ஜங்கிள் சபாரி’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த திட்டத்தின் தொடக்கமாக காளிகேசம் பகுதியில் வனத்துறையின் திறந்த ஜீப் வாகனங்களில் செயல்படுத்தலாம்.
பயணிகள் அனைவரும் வனத்துறையின் திறந்த ஜீப் வாகனத்தில் ஏறி, வனத்துறை ஓட்டுநர் பாலமோர், முத்துக்குளிவயல் போன்ற மலைப் பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று, இயற்கையை ரசித்த பின்னர் மீண்டும் காளிகேசத்தில் இறக்கிவிட வேண்டும். காளிகேசம் முதல் முத்துக்குளிவயல் வரையிலான ஜங்கிள் சபாரி திட்டத்தை செயல்படுத்தும் போது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை, பயணிகள் வாகனத்தை விட்டு இறங்க கூடாது. வாகனத்தில் நான்கு பக்கமும் முழு நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இதை காளிகேசம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க வேண்டும். பூக்களை பறிக்வோ, தாவரங்களை சேதம் செய்யவோ கூடாது. வனத்துறை சார்பாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வண்டியிலிருந்து கீழே இறங்க அனுமதிக்க வேண்டும். குடிக்க தண்ணீர் மட்டும் கொண்டு செல்ல அனுமதி, உணவு பொருட்கள், நொறுக்குத்தீனி கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் உள்ளிட்ட விதிமுறைகளுடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 47 குடியிருப்புகளில் பரவியிருக்கும் பழங்குடி மக்கள் (சுமார் 7,200 பேர்), இந்த காடுகளுடன் நெருங்கிய இணைப்பில், இயற்கையின் தாளங்களுடன் இணைந்து வாழ்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட காணி இளைஞர்கள் சான்றளிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளாக பயிற்றுவிக்கப்பட்டு உள்ளனர். இது சுற்றுலா சமூகத்திற்கு பயனளித்து, பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கிறது. இவர்கள் இந்த ஜங்கிள் சபாரி திட்டத்தில் வழிகாட்டிகளாகப் பயன்படுத்தப்படலாம், இதன்மூலம் உள்ளூர் சமூகத்திற்கு பொருளாதாரப் பயன்களை உருவாக்கலாம் என்றும் வன ஆர்வலர்கள் கருத்து கூறி உள்ளனர். கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தின் இயற்கை அழகையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஜங்கிள் சபாரி ஒரு சிறந்த வழியாக இருக்கும். இந்தத் திட்டம், உள்ளூர் பழங்குடி மக்களின் பங்களிப்புடன், நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கவும், பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்தவும் உதவும். எனவே, குமரி மாவட்டத்தில் காளிகேசம் முதல் முத்துக்குளிவயல் வரையிலான ஜங்கிள் சபாரி திட்டத்தை செயல்படுத்த வனத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை ஆகும்.
கேரளாவில் ஜங்கிள் சபாரி;
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகமானது கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையில் உள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம், அதன் பண்பட்ட பல்லுயிர் பெருக்கம், அடர்ந்த காடுகள் மற்றும் வங்காள புலிகளின் அற்புதமான இருப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. சுமார் 643 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள பரம்பிக்குளம், இயற்கை ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சாகச பயணிகளுக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்குகிறது. பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் மூன்று மணி நேர ஜங்கிள் சபாரி மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த சபாரியில், ஒரு இயற்கை ஆய்வாளர் வனத்துறை வாகனத்துடன் பயணித்து, பயணிகளுக்கு இயற்கை நிலப்பரப்பை விளக்குவார். கேரளா மாநில வனத்துறை சார்பாக இந்த ஜங்கிள் சபாரி மிகவும் பிரபலமாக உள்ளது. முதல் சபாரி பேருந்து காலை 8 மணிக்குத் தொடங்கி, போதுமான பயணிகள் ஏறிய பிறகு மட்டுமே புறப்படும். கடைசி சபாரி பேருந்து மதியம் 2 மணிக்குப் புறப்படும், அதன் பிறகு அன்றைய சபாரி மூடப்படும். பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் போலவே, கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயமும் காட்டுயிர் பாதுகாக்கப்பட்ட முக்கியமான பகுதியாக உள்ளது. பரம்பிக்குளத்தில் ஜங்கிள் சஃபாரி வெற்றிகரமாக இயங்குகிறது என்கிறார்கள்.