குமரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் 15 மணி நேர தாமதம்: சென்னை பயணிகள் அவதி
நெல்லை: கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, சென்னை வழியாக ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 15 மணி நேரம் தாமதமாக நேற்றிரவு புறப்பட்டுச்சென்றது. இதனால் இந்த ரயிலில் சென்னை செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள்வெகுநேரம் காத்திருந்து சென்றனர்.
கன்னியாகுமரி - ஹவுரா இடையே (வண்டி எண்: 12666) வாரம் ஒரு முறை சனிக்கிழமை தோறும் அதி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வழியாக நெல்லைக்கு காலை 8 மணிக்கு வந்து சேரும். பின்னர் நெல்லையில் இருந்து 8.05 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டிக்கு 8.53 மணிக்கும், மதுரைக்கு 10.45 மணிக்கும், திருச்சிக்கு நண்பகல் 1.25 மணிக்கும், விழுப்புரத்திற்கு 4.10 மணிக்கும், தாம்பரத்திற்கு மாலை 6.08 மணிக்கும், சென்னை எழும்பூருக்கு இரவு 6.50 மணிக்கும் சென்றடையும். இதனால் வார விடுமுறை நாட்களில் பகல் நேரத்தில் மதுரை, திருச்சி செல்பவர்களும், சென்னை செல்பவர்களும் இந்த ரயிலில் பயணம் செய்வது வழக்கம்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் இரவு ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பலரும் ஹவுரா ரயிலில் சென்னை செல்வது வழக்கம். இந்நிலையில் இணை ரயில் தாமதம் காரணமாக நேற்று காலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் 15 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக நேற்று இரவு 9 மணிக்கு தான் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. இதனால் நெல்லை, கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் பலரும் வெகுநேரம் காத்திருந்து புறப்பட்டு சென்றனர்.