குமரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்
நாகர்கோவில் : தமிழ்நாடு முதலமைச்சரின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி, தோவாளை, சகாயநகர், மாதவலாயம், செண்பகராமன்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
வருகை தந்த பொதுமக்கள், பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின்படி, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய், தொழுநோய் பரிசோதனைகள், ரத்த பரிசோதனை, பெண்களுக்கான கருப்பை வாய், மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவுகள் மொத்தமாக கோப்பு வடிவில் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 9 முகாம்கள் நடைபெற்றன. அதில் 4 ஆயிரத்து 930 ஆண்களும், 11 ஆயிரத்து 863 பெண்களும் என மொத்தம் 16 ஆயிரத்து 793 பயனாளிகள் பயன்பெற்றனர். 10வது முகாமில் 1500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இதுவரை நடந்த முகாம்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
முகாமில் கலெக்டர் அழகுமீனா, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சகாய ஸ்டீபன் ராஜ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் லியோ டேவிட், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, துணை இயக்குநர்கள் டாக்டர் கிரிஜா (தொழுநோய்), டாக்டர் ரவிக்குமார் (குடும்பநலம்), வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், முகாம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிவினா, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.