குமரி மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்
*மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
நாகர்கோவில் : குமரி மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நாகர்கோவிலில் நேற்று தொடங்கிய நிலையில் மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. 2025-26ம் கல்வியாண்டுக்கான போட்டிகளின் கருப்பொருள் ‘பசுமையும் பாரம்பரியமும்’ ஆகும். ஐந்து பிரிவுகளாக 1 மற்றும் 2-ம் வகுப்பு, 3, 4, 5-ம் வகுப்பு, 6, 7, 8-ம் வகுப்பு, 9, 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு என்று போட்டிகள் நடத்தப்படுகிறது.
இசை பிரிவில் மெல்லிசை, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், நடனத்தில் நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், கரகாட்டம், நாடக பிரிவில் நாடகம், பொம்மலாட்டம், பலகுரல் பேச்சு, நகைச்சுவை, இலக்கியம் பிரிவில் பேச்சு, கட்டுரை, கதை கூறுதல், திருக்குறள் ஒப்பித்தல், கலைகள் பிரிவில் ஓவியம், வண்ணம் தீட்டுதல், மணல் சிற்பம், மாறுவேடம், வில்லுப்பாட்டு போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல்நிலை போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறுவட்ட, வட்டார அளவில் பள்ளிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த நிலைக்குத் தகுதி பெறுகின்றனர். வட்டார அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநில அளவில் அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ‘கலையரசன்’ மற்றும் ‘கலையரசி’ போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறப்பாகச் செயல்படும் சில மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு குமரி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று தொடங்கியது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தொடக்கி வைத்தார்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் (ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் அல்லது ஒரு குழு) மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று வருகின்றனர். வகுப்புகள் 1 முதல் 8 வரை அரசு பள்ளிகளுக்கு நேற்று போட்டிகள் நடந்தன. இதில் ஆர்வமுடன் மாணவ மாணவியர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று (29ம் தேதி) போட்டிகள் நடக்கிறது. இதில் வகுப்புகள் 9 முதல் 10 அரசு பள்ளிகள், 30ம் தேதி காலை 9.30க்கும், 11 மற்றும் 12 அன்று காலை 11க்கும் போட்டிகள் நடக்கிறது. வகுப்புகள் 9, 10 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 31ம் தேதி காலை 9.30க்கும், 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு காலை 11க்கும் போட்டிகள் நடைபெறுகிறது.